“கொரோனா விவகாரத்தை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்”: WHO மறைமுக எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
“கொரோனா விவகாரத்தை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்”: WHO மறைமுக எச்சரிக்கை

வாஷிங்டன்: சீன அரசின் அரசியல் கைபொம்மையாக உலக சுகாதார அமைப்பு மாறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு அந்த அமைப்பின் தலைவர் பதில் அளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது,கொரோனா தொற்று சீனாவில் பரவியபோது, உலக சுகாதார அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமலும், சீனாவுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.2018-2019 ம் ஆண்டில் அமெரிக்கா தனது நிதியில் 14 புள்ளி 67 விழுக்காடு வழங்கியதாகக் கூறிய அவர், இனி நிதியுதவி குறித்து பரிசீலிக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பேரழிவுக்கு உலக சுகாதார அமைப்பே காரணம் என்று கூறிய டிரம்ப், அந்த அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பு டெட்ராஸ் அதானம், அரசியல் கட்சிகள் கொரோனா வைரஸை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மக்களை காக்க வேண்டியதே அரசின் கடமையாக இருக்க வேண்டும், இல்லையேல் அதிகளவு பிண பைகளை உலகம் பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிடும் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் சீனாவும் ஒன்றிணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராட முன் வரவேண்டும் எனவும் டெட்ராஸ் கேட்டுக் கொண்டார்.மோசமான வைரஸுடன் உலக நாடுகள் அனைத்தும் போராடி கொண்டிருக்கும் போது, வைரஸை வைத்து அரசியல் செய்தால் மிகவும் வருந்தும் சூழல் உருவாகும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

மூலக்கதை