'அனுமன் போன்று உதவியுள்ளீர்கள்': ராமாயணத்தையும், சஞ்சீவி மூலிகையையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

தினகரன்  தினகரன்
அனுமன் போன்று உதவியுள்ளீர்கள்: ராமாயணத்தையும், சஞ்சீவி மூலிகையையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

பிரேசில் : பிரேசிலுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கு அந்நாட்டு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்து கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில், பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனாரோ ராமாயணம் மற்றும் பைபிளை மேற்கோள்காட்டி கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை தயாரிப்புக்கான மூலப்பொருட்களை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரேசில் அதிபர், உரிய காலத்தில் செய்த உதவிக்குப் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.இதற்கு நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடிக்கு பிரசேசில் அதிபர் ஜேர் எம்.போல்சோனாரோ கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடவுள் ராமரின் சகோதரர் லட்சுமணன் மூர்ச்சையாகி போரில் விழுந்தவுடன், கடவுள் அனுமன் இமாலய மலைப்பகுதிக்குச் சென்று அரிய சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனைக் காத்தார். அனுமன் செய்த உதவி போல் செய்துள்ளீர்கள். இறைத்தூதர் ஏசு, நோயுற்றவர்களை குணப்படுத்தி, பார்டிமுக்கு பார்வை வழங்கியதைப் போல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை விலக்கி உதவியுள்ளீர்கள்.கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வோம். இருநாட்டு மக்களின் ஆசிகளையும் பகிர்ந்து கொள்வோம். எங்கள் நாட்டுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.அதற்கு மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், “இந்தக் கடினமான நேரத்தில் பிரேசிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் என பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள், உதவிகளுக்கு இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை