கொரோனா யுத்தத்தில் இந்தியாவிற்கு மட்டுமல்ல; மனிதகுலத்திற்கே உதவும் பிரதமர் மோடியின் வலிமையான தலைமைக்கு நன்றி : அதிபர் டிரம்ப் புகழாரம்

தினகரன்  தினகரன்
கொரோனா யுத்தத்தில் இந்தியாவிற்கு மட்டுமல்ல; மனிதகுலத்திற்கே உதவும் பிரதமர் மோடியின் வலிமையான தலைமைக்கு நன்றி : அதிபர் டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன் : கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பிய இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று மிரட்டல் பாணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அதிபர் ட்ரம்ப் ட்விட் செய்துள்ளார்.அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் நண்பர்களிடமிருந்து நிறையவே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன். இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கே உதவும் வலிமையான தலைமைப்பண்புள்ள பிரதமர் மோடிக்கு நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.

மூலக்கதை