19-வது மாநிலமாக பட்டியலில் சேர்ந்த ஜார்கண்ட்: கொரோனா தாக்குதலால் மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி...3 பேருக்கு பாதிப்பு

தினகரன்  தினகரன்
19வது மாநிலமாக பட்டியலில் சேர்ந்த ஜார்கண்ட்: கொரோனா தாக்குதலால் மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி...3 பேருக்கு பாதிப்பு

ராஞ்சி: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் பலி எண்ணிக்கை 88,403 ஆக உயர்ந்துள்ளது. 1,513,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் 18 மாநிலங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் 19-வது மாநிலமாக ஜார்கண்ட் மாநிலத்தில் முதன் முறையாக  கொரோனவால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மாநிலத்தில் மொத்தம் 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 75 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுதான் ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் பலி. இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 738 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை