நல்லா இருக்கீங்களா? ஒரு லட்சம் வீடுகளில் விசாரணை: 33 ஆயிரம் வீடுகளின் 'பல்ஸ்' ரெடி

தினமலர்  தினமலர்
நல்லா இருக்கீங்களா? ஒரு லட்சம் வீடுகளில் விசாரணை: 33 ஆயிரம் வீடுகளின் பல்ஸ் ரெடி

கோவை:கோவை நகர் பகுதியில் மட்டும், ஒரு லட்சம் வீடுகளுக்கு நேரில் சென்று, சளி, காய்ச்சல், இருமல் இருக்கிறதா என, நலம் விசாரிக்க, சுகாதார குழுவினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில், 33 ஆயிரம் வீடுகளில் விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.கோவையில் இருந்து வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு, 'கொரோனா' நோய் தொற்று இருக்கிறதா என, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று உள்ளவர்கள், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், வெளிநாடு சென்று வந்தவர்களாக, 2,846 பேர் அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாட்கள் வெளியே செல்லக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களே...நலமா
இதற்கிடையே, நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளாக, 22 இடங்கள் கண்டறியப்பட்டன. ஒரு கி.மீ., சுற்றுவட்டாரத்தில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, நலம் விசாரிக்க, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.அதன்படி, மாநகராட்சி மருத்துவமனை செவிலியர், செவிலிய மாணவ, மாணவியர், சத்துணவு பணியாளர்கள் என, 180 பேர் களப்பணிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.ஒரு லட்சம் வீடுகள் இலக்கு!ஒரு நபர், நாளொன்றுக்கு, 50 வீடுகளில் நலம் விசாரிக்க வேண்டும். மொத்தம் ஒரு லட்சம் வீடுகளில் விசாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதுவரை, 33 ஆயிரம் வீடுகளில் சுகாதார குழுவினர் விசாரித்துள்ளனர். காய்ச்சல், இருமல், சளி இருப்பின், டாக்டர்களுக்கு தெரிவிக்கின்றனர்.சாதாரண காய்ச்சல் என்றால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'கொரோனா' சந்தேகம் இருந்தால், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து, சளி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறியதாவது:வீடு வீடாகச் செல்வோர், சளி, காய்ச்சல், இருமல் இருக்கிறதா என்று மட்டும் கேட்பதில்லை. எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; என்னென்ன வயதினர்; சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்களா, அவர்களுக்கான மருந்து, மாத்திரை இருக்கிறதா, பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இருக்கிறார்களா, பரிசோதனை செய்யும் நாள், டெலிவரி தேதி எது, மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக அழைக்க வேண்டிய போன் எண் தெரிவிக்கின்றனர்.மருந்து, மாத்திரை தேவையெனில், மறுநாள் செல்லும்போது, வீடு தேடிச் சென்று ஒப்படைக்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எந்தெந்த பகுதிகளில் ஆய்வு
கோவையில் கே.கே.புதுார், போத்தனுார் ரயில்வே மருத்துவமனை, போத்தனுார், உக்கடம், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், குனியமுத்துார், கவுண்டம்பாளையம், சேரன் மாநகர் ஆகிய ஒன்பது பகுதிகளில், 'கொரோனா' கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இருந்து, 30 பேர் நோய் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 4 பேர் குணமாகி, வீட்டுக்குச் சென்றுள்ளனர். மற்றவர்கள், கண்காணிப்பில் இருக்கின்றனர்.
ஒன்பது கட்டுப்பாட்டு மண்டலங்களில், கே.கே.புதுார், போத்தனுார், சாய் அம்மன் அபார்ட்மென்ட், பாரதி நகர், அம்மன் நகர், கருப்பராயன் கோவில் வீதி, ஜம் ஜம் நகர், போத்தனுார் மெயின் ரோடு, திருமறை நகர், ஜி.எம்., நகர், ரோஸ் கார்டன், தெற்கு உக்கடம், கோட்டைமேடு, இலாஹி நகர், பூ மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, தடாகம் மில் ரோடு, ராமசந்திரா ரோடு, கஸ்துாரி கார்டன், வசந்தம் நகர், கோவை கார்டன், சிவா நகர், அம்பேத்கர் காலனி, சாவித்திரி நகர் ஆகிய, 24 பகுதிகளில், சுகாதார குழுவினர் வீடு வீடாகச் செல்கின்றனர்.

மூலக்கதை