தனியார் ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
தனியார் ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஷசாங்க் தியோ சுதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், ‘கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிக  கட்டணம் வசூலிக்கின்றன. இப்பரிசோதனைகளை மக்களுக்கு இலவசமாக கிடைக்க செய்ய வேண்டும். கொரோனா அதிகரித்தும் வரும் நிலையில், பாதிககப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய தகவல்களை நாடு முழுவதும் தெரிவிக்கும்படி அரசுக்கு  உத்தரவிட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை  நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ் ரவீந்திர பாட் அமர்வு நேற்று விசாரித்தது.  அப்போது, ‘118 ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு 15,000 சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன. இதனை அதிகரிப்பதற்காக மேலும் 47 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி  அளிக்கப்பட்டு இருக்கிறது,’ என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து,  ‘தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆய்வகங்கள் வசூலித்த கூடுதல் கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும். மக்களுக்கு இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பாதிப்பு விவரங்களை, தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தெரிவிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை  வலியுறுத்த வேண்டும்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை