இங்கிலாந்தில் பல ‘அறிவுஜீவிகள்’ அதிரடி: கொரோனாவா பரப்புறே... கொளுத்தி புடுறோம் இரு...

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் பல ‘அறிவுஜீவிகள்’ அதிரடி: கொரோனாவா பரப்புறே... கொளுத்தி புடுறோம் இரு...

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவ 5ஜி செல்போன் கோபுரங்களே காரணம் என நம்பி அவற்றை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை காவு வாங்கியுள்ளது. 50 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவ செல்போன் கோபுரங்கள்தான் காரணம் என புரளி பரவியதால் அதை உண்மை என நம்பி பொதுமக்கள் ஆங்காங்கே இருந்த டவர்களை தீ வைத்து எரித்துள்ளனர்.அதிலும் 5ஜி நெட்வொர்க் கொண்ட செல்போன் டவர்கள்தான் காரணம் என நம்பி அவற்றை தேடித்தேடி அழித்தனர். லிவர்பூல் மற்றும் வெஸ்ட்மிட்லேண்ட் பகுதிகளை சுற்றி இருந்த செல்போன் கோபுரங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் 5 ஜி சேவை தொடங்கப்படாத நிலையில் 5ஜி நெட்வொர்க் கோபுரங்கள் என நினைத்து 4ஜி நெட்வொர்க் செல்போன் கோபுரங்களை எரித்து நாசம் செய்துள்ளனர். அத்துடன் நில்லாமல், தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களையும் பிடித்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஊழியர்களை தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக இங்கிலாந்தில் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களான ஓ2 மற்றும் மொபைல் யுகேயைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், `கொரோனாவுக்கும் 5ஜி நெட்வொர்க்குக்கும் அறிவியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க வதந்தியே. எங்கள் ஊழியர்களை தாக்க வேண்டாம்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை