மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு தொற்று ஒரே நாளில் புனேயில் 8, மும்பையில் 5 பேர் பலி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு தொற்று ஒரே நாளில் புனேயில் 8, மும்பையில் 5 பேர் பலி

மும்பை: ஒரேநாளில் நேற்று மும்பையில் 5 பேரும், புனேயில் 8 பேரும் கொரோனா வைரசுக்கு பலியானார்கள். மேலும் மும்பையில் 106 பேர் உட்பட மாநிலத்தில் 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,135 ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் குறிப்பாக, மும்பை மற்றும் புனேயில் கொரோனா வைரஸ் பரவலும், அந்த கொடிய வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மும்பையில் 106 பேருக்கும், புனே உள்ளிட்ட வேறு சில இடங்களில் 11 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மும்பையில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 696 ஆகவும், மகாராஷ்டிராவில் 1,135 ஆகவும் அதிகரித்துள்ளது.இதுதவிர நேற்று மும்பையில் 5 பேரும், புனேயில் 8 பேரும் கொரோனா வைரசுக்கு பலியானார்கள். இதன் மூலம் மும்பையில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், புனேயில் 16 ஆகவும், மாநில அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆகவும் அதிகரித்தது. நேற்று முன்தினம் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,018 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 64 ஆகவும் இருந்தது. புனேயில் நேற்று அரசுக்கு சொந்தமான சசூன் மருத்துவமனையில் 5 பேரும், மாநகராட்சிக்கு சொந்தமான நாயுடு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மற்ற இரண்டு பேர் இரு வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக புனே டிவிஷனல் கமிஷனர் தீபக் மாய்ஸ்கர் கூறினார்.

மூலக்கதை