ஆந்திராவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 3 மருத்துவர், 2 செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 3 மருத்துவர், 2 செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

திருமலை: ஆந்திராவில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த 3 மருத்துவர்கள், 2 செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆந்திராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 348 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சைக்கு பின் கூடுதலாக 4 பேர் என மொத்தம் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் 7, நெல்லூரில் 6, சித்தூரில் 3,  கிருஷ்ணா மாவட்டத்தில் 6 என மொத்தம் 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இந்துபுரத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுவாச பிரச்னை இருப்பதாக அனந்தப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார்.நாளுக்கு நாள் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் 3 வார்டுகள் மாற்றப்பட்டு இறுதியாக அவரை கொரோனா சிகிச்சைக்கான வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றால் உயிரிழந்தது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த  மருத்துவர்கள் இருவருக்கும்,  இரண்டு செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மருத்துவமனையில் பணிபுரியும்  அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தொடர்புடைய 16 பேரையும்,  இந்துபுரத்தை சேர்ந்த உயிரிழந்த நபரின் உறவினர்கள் 8 பேரையும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மருத்துவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மருத்துவர் புதிய மருத்துவமனையை தொடங்கிய நிலையில் பல மருத்துவர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்களை சந்தித்ததும் தெரியவந்தது. அவ்வாறு மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அனில்குமார் மற்றும் சிலரை சந்தித்ததாக தெரியவந்ததையடுத்து அமைச்சர் அனில்குமாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதேபோன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள மருத்துவருடன் தொடர்புடைய 1200 பேரை தனிமைப்படுத்தி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை