போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை

தினகரன்  தினகரன்
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை

அசன்சியான்: போலி பாஸ்போர்ட்டில் பராகுவே சென்றதற்காக கைது செய்யப்பட்ட  பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதே நேரத்தில் வீட்டுக் காவலை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேசில் கால்பந்து வீரர்  ரொனால்டினோ (40).  இவர் 2002ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பெற்றிருந்தார். இவர்  குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க மார்ச் 4ம் தேதி பக்கத்து நாடான பராகுவே சென்றார். உடன் அவரது சகோதரரும், கால்பந்து வீரருமான ராபர்டோ டி அசிஸ் மேரெய்ராவும் சென்றிருந்தார்.அவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் பராகுவே சென்றது போலீஸ் விசாரணையில் உறுதியானது. அதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும்  சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில்  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது ரொனால்டினோ சகோதரர்களை சிறையில் இருந்து விடுவித்த நீதிபதி கஸ்டவோ அமரில்லா,  விசாரணை முடியும் வரை இருவரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.முன்னதாக நீதிபதி உத்தரவின்படி  ரொனால்டினோ சார்பில் சுமார் ₹12.20 கோடி ஜாமீன் தொகை செலுத்தப்பட்டது. மேலும் வீட்டுக்காவலில் வைக்கப்பட உள்ள 4நட்சத்திர  ஓட்டலுக்கான செலவுத் தொகையையும் தாங்களே  ஏற்பதாக அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரொனால்டினோ சகோதரர்களுக்கு போலி பாஸ்போர்ட் ஏற்பாடு செய்தாக கூறப்படும் அறக்கட்டளை தலைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை