இந்தியாவில் ஒரே நாளில் 25 பேர் பலி: கொரோனா பாதிப்பு 5,274 பலி எண்ணிக்கை 149 ஆனது: சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் ஒரே நாளில் 25 பேர் பலி: கொரோனா பாதிப்பு 5,274 பலி எண்ணிக்கை 149 ஆனது: சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,274 ஆகவும், பலி எண்ணிக்கை 149 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 485 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று மட்டும் 25 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் சந்தேக நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,274 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 410 பேர் குணமடைந்து சென்று விட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,714 ஆக உள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பாதித்த 25 பேர், நேற்று இறந்ததால் பலி எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 16 பேரும், மேற்குவங்கம், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் தலா ஒருவரும் நேற்று இறந்தனர்.  மகாராஷ்டிராவில் மொத்த பலி எண்ணிக்கை 64 ஆகவும், குஜராத், மத்தியபிரதேசத்தில் தலா 13 ஆகவும், டெல்லியில் 9 ஆகவும், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா 7 ஆகவும் உயர்ந்துள்ளன. மேற்கு வங்கத்தில் 5 ஆகவும், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தலா 4 ஆகவும். உபி, அரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 ஆகவும் உயர்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 2 பேரும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் மகாராஷ்டிராவில் 1,018 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 690 ஆகவும், டெல்லியில் 576, தெலங்கானாவில் 427, கேரளாவில் 336, ராஜஸ்தானில் 328, உ.பியில் 343, ஆந்திராவில் 305, ம.பி.யில் 229, கர்நாடகாவில் 175, குஜராத்தில் 165, அரியானாவில் 147, ஜம்மு காஷ்மீரில் 116, மேற்குவங்கத்தில் 99, பஞ்சாப்பில் 91, ஒடிசாவில் 42, பீகாரில் 38, உத்தரகாண்டில் 31, அசாமில் 27, சண்டிகர் மற்றும் இமாச்சலில் தலா 18 ஆகவும், லடாக்கில் 14 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிகைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில்கூறியதாவது: மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு கொரோனா தொற்று தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகம் பேர் பலியான மகாராஷ்டிராவில் புனே மற்றும் கோண்டவா பகுதி சீல் வைக்கப்பட்டு வீடு, வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியிலும் காண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.  தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிவது மிக முக்கியமான பணியாகும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். மிகப் பெரிய சவாலை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவமனைகளில், மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்படாத வகையில் தொற்று தடுப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா தொற்று நோய் என்பதால், இதற்கு மக்கள் ஆதரவை நாங்கள் கோருகிறோம். முடக்கக் காலத்தில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். கண்காணிப்பு மற்றும் தொற்று ஏற்பட்டவர்களை கண்டறியும் பணியில் கவனம் செலுத்தும்படி மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். சமூக இடைவெளி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்துதல் ஆகிய இரு அணுகுமுறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. தொகுப்பு கண்காணிப்பு திட்டத்தில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து நாட்டில் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. தற்போது மட்டும் அல்ல, எதிர்காலத்திலும் பற்றாக்குறை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.உலகளவில் 14 லட்சம் பேர் பாதிப்புஉலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 83,470 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு 14 லட்சத்து 47 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் பலி எண்ணிக்கை 17,127 ஆகவும், ஸ்பெயினில் 14,550ஆகவும், அமெரிக்காவில் 12 ஆயிரத்து 722 ஆகவும், பிரான்சில் 10,328 ஆகவும், இங்கிலாந்தில் 6,159 ஆகவும், ஈரானில் 3,872 ஆகவும் உயர்ந்துள்ளது.

மூலக்கதை