கேள்விக்குறியில் 80 ஆயிரம் பேர் வேலை சில்லரை விற்பனை துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

தினமலர்  தினமலர்
கேள்விக்குறியில் 80 ஆயிரம் பேர் வேலை சில்லரை விற்பனை துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

புதுடில்லி:கொரோனா பாதிப்பால், சில்லரை விற்பனை துறையில், கிட்டத்தட்ட, 80 ஆயிரம் பேர் வேலை இழப்பை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்து உள்ளது.

இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., இது குறித்து, ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில், 3.93 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும், நாடெங்கிலும் உள்ள, 768 சில்லரை விற்பனையாளர்களிடம் கணக்கு எடுக்கப்பட்டது.


வருவாய்
இந்த ஆய்வின் போது, தங்கள் வணிக நிலைமை மற்றும் மனிதவளம் ஆகியவை குறித்த வணிகர்கள், தங்கள் எண்ணங்களை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிய சில்லரை விற்பனையாளர்கள், 30 சதவீதம் பேரை இழக்க வேண்டியிருக்கும் என்றும்; நடுத்தர அளவிலான சில்லரை விற்பனையாளர்கள், 12 சதவீதத்தினரையும்; பெரிய விற்பனையாளர்கள், 5 சதவீதம் பேரையும் இழக்க வேண்டியிருக்கும் என தெரிவித்து உள்ளனர். மொத்தத்தில், 20 சதவீதம் பேருக்கு பணியிழப்பு நேரிடும் என தெரியவருகிறது.


அதாவது, 78 ஆயிரத்து, 592 பேர்.இந்த ஆய்வில், சிறிய விற்பனையாளர்கள் தரப்பில், 65 சதவீதம் பேரும்; நடுத்தரத்தில், 24 சதவீதம் பேரும்; பெரிய அளவிலான விற்பனையாளர்கள் பிரிவில், 11 சதவீதம் பேரும் பங்கெடுத்துக்கொண்டனர்.நாடு முடக்கப்பட்டதை அடுத்து, உணவு பிரிவு அல்லாத சில்லரை விற்பனையாளர்களில், 95 சதவீதம் பேர், தங்களது விற்பனை நிலையங்களை மூடிவிட்டனர்.

இந்த காலக்கட்டத்தில், இவர்களுக்கு எந்த வருவாயும் வரவில்லை. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு, கடந்த ஆண்டு வந்த வருவாயோடு ஒப்பிடும்போது, 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் கருதுகின்றனர். உணவு பொருட்கள் பிரிவில், அடுத்த ஆறு மாதங்களுக்கு, கடந்த ஆண்டு, இதே காலத்தில் கிடைத்த வருவாயில், 56 சதவீதம் அளவுக்கு கிடைக்கும் என கருதுகின்றனர்.

உணவு


சில்லரை விற்பனையாளர்களில் பெரும்பாலானோர், அத்தியாவசிய தேவையில் வராத பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். ஆனால், உணவு அல்லாத பிரிவினர் எந்த வருமானத்துக்கும் வழியின்றி இருக்கின்றனர்.நிவாரணம்ஆய்வில் கலந்து கொண்டவர்களில், 70 சதவீதம் பேர், வணிக நிலைமை சரியாக, ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்றும்; 20 சதவீதம் பேர், ஓராண்டுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்து உள்ளனர்.


கணிசமான அளவில் பணியாளர்களை பயன்படுத்தும் விற்பனையாளர்களில், மூன்றில் இரண்டு விற்பனையாளர்கள், பணியாளர்கள் சம்பளம் மற்றும் வாடகையில், அரசின் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம், வழக்கமான செலவுகளை நிர்வகிக்கவும், பணியாளர்களை குறைப்பதை தவிர்க்கவும் இயலும் என கருதுகின்றனர்.

மேலும், மூன்றில் இரண்டு விற்பனையாளர்கள், ஜி.எஸ்.டி., மற்றும் கடன்களில் அரசின் நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர்.மேலும், மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு, கூடுதல், 60 நாட்களையும் கோருகின்றனர்.அரசின் இந்த ஆதரவு இல்லாவிட்டால், 20 சதவீதம் பேர் பணியிழப்பை சந்திக்க நேரிடும் என, தெரிகிறது.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை