மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் ; 15 மாவட்டங்களுக்கு சீல் : கொரோனா பரவலை தடுக்க உ.பி. அரசு அதிரடி நடவடிக்கை

தினகரன்  தினகரன்
மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் ; 15 மாவட்டங்களுக்கு சீல் : கொரோனா பரவலை தடுக்க உ.பி. அரசு அதிரடி நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நொய்டா பகுதியில் 58 பேரும், ஆக்ராவில் 44 பேரும், மீரட்டில் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்துள்ளது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது.மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் தலைமை பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. திவாரி தெரிவித்துள்ளார். விதியை மீறி சீல் வைக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியே வந்தாலோ, அல்லது மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் தங்கள் பணிகளை மேற்கொள்ளதடுத்தாலோ அவர்கள் மீது அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திவாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை