தனுஷ் பற்றி ஷான் ரோல்டன் 'ஷாக்' பதிவு

தினமலர்  தினமலர்
தனுஷ் பற்றி ஷான் ரோல்டன் ஷாக் பதிவு

சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என ஒருவருக்கொருவர் நட்பு இருக்க வேண்டியதுதான். ஆனால், அதற்காக ஓவராகப் புகழ்ந்து தள்ளுவது நிச்சயம் நட்பாக இருக்க முடியாது.

நடிகர் தனுஷ், இயக்குனராக முதன் முதலாக இயக்கிய படம் 'ப பாண்டி'. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஷான் ரோல்டன். இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பாராட்டிக் கொள்வார்கள். இருவரது புகழ்ச்சியான வார்த்தைகளைப் பார்த்தால் புகழே ஓடிவிடும். அந்த அளவிற்குப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

நேற்று ரசிகர் ஒருவர் 'ப பாண்டி' படம் பற்றியும், தனுஷ், ஷான் ரோல்டன் பற்றியும் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷான் ரோல்டன் புகழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுவிட்டார்.

“ஒவ்வொரு வருடமும் 1000 படங்கள் வரலாம். ஆனால், அந்தப் படங்கள் அனைத்தும் 'ப பாண்டி' போல எவர்க்ரீன் படமாக இருக்காது. தமிழ் சினிமாவின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பது, ஆத்மார்த்தமான, என்டர்டெயின்மென்டான படங்களைத் தருவதில் இயக்குனர் தனுஷ் மிகப் பெரும் பங்காற்றுவார். அது நிச்சயம் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும்” என தனுஷை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதைப் படித்தால் தனுஷே கொஞ்சம் வெட்கப்படத்தான் செய்வார். 'ப பாண்டி' படம் வெளிவந்த போது பெரிய வரவேற்பை பெறவில்லை. சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. ஷான் ரோல்டன் இப்படிப் பேசிப் பேசியே தனுஷிடமிருந்து யுவன், அனிருத்தை ஓரங்கட்டி விட்டதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு உண்டு.

மூலக்கதை