நுகர்பொருட்கள் துறைக்கு சோதனையான காலம்வினியோக சிக்கலும், இருப்பு குறைவும் சவாலாக இருக்கும்

தினமலர்  தினமலர்
நுகர்பொருட்கள் துறைக்கு சோதனையான காலம்வினியோக சிக்கலும், இருப்பு குறைவும் சவாலாக இருக்கும்

புதுடில்லி:நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வினியோக பாதிப்புகளால், அடுத்த, இரண்டு முதல், மூன்று வாரங்கள் மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும் என்று, கே.பி.எம்.ஜி., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கொரோனா வைரஸ் தாக்குதலை மனதில் கொண்டு, நுகர்வோர்கள் அத்தியாவசிய பொருட்களை தேவைக்கும் அதிகமாக வாங்கி குவிக்கின்றனர். சவால்இதனால் தேவை அதிகரித்து, நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்தது.

ஆனால், சரக்குகளின் வினியோகம் பாதிக்கப்பட்டு, இருப்பு குறைவதால், தற்போது விற்பனையும் குறைந்து வருகிறது. தற்காலிகமாக தேவை அதிகரித்திருக்கும் நிலையில், வினியோகத்தை எவ்வாறு தடைபடாமல் செய்வது என்பது சவாலான விஷயமே. வரக்கூடிய இரண்டு, மூன்று வாரங்கள் சோதனையான காலகட்டம் தான்.‘ஆன்லைன்’ மூலமாக செயல்படும், இ- – காமர்ஸ் நிறுவனங்களும் வைரஸ் பாதிப்பால் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.


இவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.நிச்சயமற்ற நிலையில், அரிசி, மாவு மற்றும் பயறு வகைகளை நுகர்வோர் அதிகம் வாங்க முயற்சிப்பர். இது விற்பனை அதிகரிப்புக்கு வாய்ப்பாக இருந்தாலும், வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளால், விற்பனை அதிகரிப்பின் பலன், சமன் செய்யப்பட்டுவிடும்.

எனவே, நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், நேரடியாக பொருட்களை நுகர்வோரிடம் சேர்ப்பது உள்ளிட்ட பிற வழிகள் குறித்து, ஆலோசனை செய்ய வேண்டும். அரசும், அத்தியாவசிய பொருட்களை தயாரிப்பதில் உள்ள விதிகளை எளிமையாக்கி, விரைவாக வினியோகத்திற்கு அனுப்ப வகை செய்ய வேண்டும். மேலும், வணிகத்தில் ஏற்படும் அதீத இடையூறுகளுக்கு போதுமான காப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

இடையூறு

இ – காமர்ஸ் துறையிலும், வினியோக பிரிவில் அதிக அழுத்தங்கள் இருக்கும். இவர்களுக்கான இன்னொரு சவால், இவர்களது பணியாளர்களை வினியோகத்தில் எந்தவிதமான இடையூறுகளையும் சந்திக்காத வகையில் செயல்பட தயார் செய்ய வேண்டும்.தற்போது மூலப்பொருட்களின் வினியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பது, மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது.


சில குறிப்பிட்ட பொருட்களை பொறுத்தவரை, இறக்குமதி குறைந்திருப்பதும், பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.அனைத்து பிரிவுகளிலும் பணப்புழக்கம் மிகவும் குறைந்து உள்ளது. இருப்பினும், உணவு மற்றும் மளிகை சில்லரை விற்பனை பிரிவு அதிகம் பாதிக்கப்படவில்லை. பெரிய அளவிலான சில்லரை விற்பனை நிறுவனங்களின் நிலை சிக்கலாக இருக்கிறது.

நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், விற்பனையும் இன்றி, வாடகை, சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகளையும் இந்நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு, வங்கிகள் எந்த அளவுக்கு ஆதரவளிக்கும் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

பங்களிப்பு

இந்திய சில்லரை விற்பனை துறை, 2018 – 19ம் நிதியாண்டில், 72.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இது உலகளவில், ஐந்தாவது பெரிய சந்தையாகும்.சில்லரை விற்பனை துறையில், வீட்டு உபயோகம் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் மதிப்பு, 50 சதவீதமாகும்.


ஆரோக்கிய பராமரிப்பு பிரிவின் பங்களிப்பு, 31 சதவீதமாகும். மீதி, 19 சதவீதம் உணவு, பானங்கள் பிரிவின் பங்களிப்பாகும்.சில்லரை விற்பனை துறை, கடந்த, 2018- –19ம் நிதியாண்டில், நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதமும், வேலை வாய்ப்பில், 8 சதவீதமும் பங்களித்துள்ளது.

மூலக்கதை