வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல்

தினமலர்  தினமலர்
வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல்

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, 2.6 சதவீதமாக இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ., பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, எஸ்.பி.ஐ., ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலத்தில், வளர்ச்சி, 2.5 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டில், 2.6 சதவீதமாகவும் இருக்கும்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதாரம், 70 சதவீதம் அளவுக்கு ஸ்தம்பித்து நிற்கிறது.


ஏப்ரல், 14ம் தேதி வரை, நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், தடை மேலும் நீடிக்கும் என்றே பரவலாக கருதப்படுகிறது.நாடு, 21 நாட்கள் முடக்கப்பட்டதால், அதன் விளைவாக, பொருளாதாரத்தில், 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 60 ஆண்டுகளில், உலக பொருளாதார வளர்ச்சி, 2009ம் ஆண்டில் தான் மிகக்குறைவாக, 1.7 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2.6 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டில், 4.5 சதவீதமாகவும் இருக்கும்.


கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில் வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும். இருப்பினும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வலுவானதாக இருந்தால், பொருளாதார வளர்ச்சி மேம்படும் வாய்ப்பும் இருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை