கொரோனா பிறப்பிடமான சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா பிறப்பிடமான சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு

பெய்ஜிங் : கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் அதனால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்துக்கும் அதிகமானோரில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 205 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,000ஐ நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கண்டறியப்பட்டதாகவும், அப்போது காரணம் புரியாத நிமோனியா என அது அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கான மூலத்தை தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தபட்டதாக கூறியுள்ளது. அங்கு இதுவரை 81,708 பாதிக்கப்பட்ட நிலையில் 3,331 பேர் பலியானதாகவும், 77,078 குணமடைந்து அனுப்பப்பட்டதாகவும் 1,299 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை