கொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய வல்லரசு நாடுகள்: மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு

தினகரன்  தினகரன்
கொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய வல்லரசு நாடுகள்: மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு

டெல்லி: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர்  செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பிரதமர்  மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மருந்து தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கனவே தடைவிதித்தது. இந்நிலையில், இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால்  நன்றாக இருக்கும் என கூறினேன். நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன். மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க  நேரிடும் என்றார்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்கா கேட்டதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு   முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவை நம்பியுள்ள அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்ய  இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அளவில் பாரசிட்டமால் மாத்திரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை