ஸ்பானிஷ் ஃப்ளு, சார்ஸ், H1N1, மெர்ஸ், எபோலா, கோவிட் -19: ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர கிருமிகள்!!

தினகரன்  தினகரன்
ஸ்பானிஷ் ஃப்ளு, சார்ஸ், H1N1, மெர்ஸ், எபோலா, கோவிட் 19: ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர கிருமிகள்!!

டெல்லி : கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகளவில் வியாபித்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உயிரிழப்புகளை தொடர்கதையாகி வருகிறது. கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உலகிற்கு மிரட்டல் விடுப்பது இது முதன்முறையல்ல. ஸ்பானிஷ் ஃப்ளு, சார்ஸ், மெர்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா போன்ற கிருமிகள் ஏற்கனவே மனித குலத்தை உலுக்கி சென்று இருக்கின்றன. ஸ்பானிஷ் ஃப்ளு : 1918ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு எனப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகை புரட்டிப்போட்டது. இது உலக வரலாற்றில் மிக கொடூரமான தொற்றாக கருதப்படுகிறது. பறவை இன வழிதோன்றலின் மரபணுவை கொண்ட இந்த வைரஸால் ஏற்பட்ட தொற்று 50 கோடி மக்களை பாதித்தது. 5 கோடி பேரின் உயிரை குடித்தது. உலக மக்கள் தொகையில் 3ல் ஒரு பகுதியினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.சார்ஸ் : கடந்த 2002-2004ம் ஆண்டுக்கும் இடையே உலகை ஆட்டிப்படைத்த Severe Acute Respiratory Syndrome எனப்படும் சார்ஸ். இந்த வைரஸ் உருவானது சீன நாட்டின் குவாங்டாங் நகரம், காற்றில் பரவும் சார்ஸ் என்ற கொரோனா வகை வைரஸால் இந்த தொற்று நோய் ஏற்பட்டது. 24 நாடுகளில் பரவிய சார்ஸ் கிருமி, 800 பேரின் உயிரை குடித்தது. H1N1 : அடுத்ததாக H1N1 வகை பன்றி காய்ச்சல். 2009ம் ஆண்டு வெடித்து கிளம்பிய இந்த நோய்.சுவைன் ஃப்ளு என்றும் அழைக்கப்படுகிறது.இதுவே 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட influenza நோயின் முதல் உலகளாவிய தொற்று ஆகும். அமெரிக்காவே இந்த நோயின் தொடக்கப் புள்ளியாக இருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் 5 லட்சத்திற்கும், அதிகமான இறப்புகள் ஏற்பட்டன. மெர்ஸ் : Middle East respiratory syndrome coronavirus எனப்படும் மெர்ஸ் என்ற கிருமி 2012ம் ஆண்டு உலக நாடுகள் பலவற்றை மிரட்டியது. சவூதி அரேபியாவில் ஒட்டகத்தில் இருந்து மனிதர்களுக்கு தொற்றிய இக்கிருமி. 27 நாடுகளுக்கு பரவி 860 பேரை பலி கொண்டது. எபோலா : 2014ம் ஆண்டு உலகையே மிரள வைத்த மற்றொரு வைரஸ் எபோலா, பறக்கும் பாலூட்டிகளான வௌவால்களிடம் இருந்து இந்த வைரஸ் மனிதனுக்கு பரவியதாக அறியப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் உருவாகி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவியது. 6 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவினாலும் கடும் நடவடிக்கைகள் எதிரொலியாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் 15,000 பேர் எபோலா தாக்குதலுக்கு இலக்காகி உயிர்களை இழந்தனர். கோவிட் -19 : எபோலாவுக்கு அடுத்தப்படியாக தற்போது கோவிட் எனப்படும் கொரோனா உலகப் பந்தின் பெரும்பாலான நாடுகளில் வியாபித்து கொத்து கொத்தாக உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் தடுப்பு மருந்துகளை உருவாக்கவும் பல்வேறு நாடுகள் முட்டி மோதி வந்தாலும் முயற்சிகள் அனைத்தும் சோதனை அளவிலேயே உள்ளது. பிற வைரஸ்களை போல் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தின் மூலம் முடிவை ஏற்படுத்த முடியும் என்ற விஞ்ஞானிகளின் நம்பிக்கை மட்டுமே இப்போது நம்மை வழிநடத்தி வருகிறது. 

மூலக்கதை