ஊரடங்கால் வீட்டில் அடைபட்டு இருக்கும் நிலை பல நாடுகளில் பெண்களுக்கு அச்சுறுத்தல்: பாதுகாக்க ஐ.நா பொதுச் செயலர் கோரிக்கை

தினகரன்  தினகரன்
ஊரடங்கால் வீட்டில் அடைபட்டு இருக்கும் நிலை பல நாடுகளில் பெண்களுக்கு அச்சுறுத்தல்: பாதுகாக்க ஐ.நா பொதுச் செயலர் கோரிக்கை

நியூயார்க்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெண்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வீட்டிலேயே அதிக நேரம் முடங்கிக் கிடக்கின்றனர். அதனால், அவர்களுக்கு மனரீதியாக துன்புறுத்தல்களும், அச்சுறுத்தலும், குடும்ப வன்முறையும் நடப்பதாக புகார்கள் எழுந்தன. ஒரே வீட்டுக்குள் அதிக நேரம் அனைவரும் இருப்பதால், குடும்பத்தில் மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த பிரச்னை ஊரடங்கை அறிவித்த பெரும்பாலான நாடுகளில் உள்ளது. இவ்விவகாரம் குறித்து, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் அதேவேளையில், ஊரடங்கினால் வீட்டிலேயே இருக்கும் பெண்களைப் பாதுகாப்பது முக்கியம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே அதிகரித்துள்ளன. பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் அச்சுறுத்தல், துன்புறுத்தல் புகார்களும் வருகின்றன. தங்கள் சொந்த வீடுகளில், இதுபோன்ற குடும்ப வன்முறை நிகழ்வுகள் நடப்பதால், பெண்கள் மனரீதியாக பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். கடந்த வாரங்களில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களும் அச்சமும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பெண்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் உள்ளோம். கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தேசிய மறுமொழித் திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன். எனவே, பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பது அவசியம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை