கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் ‘அட்மிட்’... தனிமைப்படுத்தப்பட்டார் கர்ப்பிணி மனைவி

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் ‘அட்மிட்’... தனிமைப்படுத்தப்பட்டார் கர்ப்பிணி மனைவி

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கர்ப்பிணி மனைவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளால் பிரதமர் போரிஸ் ஜான்சன் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் பேராசிரியர் கிறிஸ் வீட்டியின் ஆலோசனையின் பேரில் லேசான அறிகுறிகள் தோன்றிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர் ஜான்சன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே பிரதமர் ஜான்சனின் உடல்நலம் குறித்த அறிக்கையில் கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனாவின் அறிகுறிகளால் பிரதமர் ஜான்சனின் கர்ப்பிணி மனைவி கேரி சைமண்ட்சும் தனிமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்த ஜான்சன், முன்பை விட நன்றாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினார். கொரோனா வைரஸ் பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தை எப்படி சென்றடைந்தது என்று ேகள்வி எழுந்துள்ளது. பிரதமர் ஜான்சனுக்கு முன்பு, பிரிட்டனின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதாக அரசு குடும்பம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அவர் என்னுடைய நண்பர். ஒரு சிறந்த மனிதர்; சிறந்த தலைவர். அவர் இன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் நலமாக மீண்டு வருவார் என்று நம்புகிறேன்; உறுதியாக இருக்கிறேன். அவர் ஒரு வலிமையான மனிதர். வலிமையான நபர்’ என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை