மாணவர்களின் மனநலம், உளவியல் சிக்கல்களுக்குத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்குமாறு யுஜிசி அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
மாணவர்களின் மனநலம், உளவியல் சிக்கல்களுக்குத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்குமாறு யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி : மாணவர்களின் மனநலம், உளவியல் சிக்கல்களுக்குத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் இதுவரை 4,067 பேருக்கு கொரோனா பாதிபபு ஏற்பட்டுள்ளது. 109 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவல் 3ம் கட்டத்தை எட்டாத வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை நீடிக்கும் இந்த ஊரடங்கால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் மனநலம், உளவியல் சிக்கல்களுக்குத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுச் செயலாளர் ரஜனீஸ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவலைத் தடுக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் மனநலம் பேணவும், உளவியல் சிக்கல்களைத் தீர்க்கவும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைபேசி, மின்னஞ்சல், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுடன் தொடர்புகொண்டு இறுக்கமற்ற சூழலில் அவர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலக்கதை