முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

தினகரன்  தினகரன்
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை

* தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசினார்புதுடெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சி  தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசினார். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றும்படியும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பல்வேறு உயர்நிலை ஆலோசனைகளை காணொளி காட்சி மற்றும் தொலைபேசி மூலம் நடத்தி வருகிறார்.இதன்படி, மாநில முதல்வர்களுடன் அவர் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நேற்று அவர், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்ேவறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா  ஆகியோரை நேற்று காலை தொலைபேசியில் அழைத்து அவர் பேசினார்.  கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது பற்றி இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் தொலைபேசியில் அழைத்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும், நாளை மறுநாள் 8ம் தேதி நாடாளுமன்றத்தில் 5 எம்பி.க்களுக்கு மேல் உள்ள நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும் நேற்று, அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த போது பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 14ம் தேதி நள்ளிரவு முடிவடைகிறது. ஆனால், நாட்டில் இன்னமும் பாதிப்புகள் குறையவில்ைல. இதனால், ஊடரங்கை நீட்டிப்பதா? அல்லது நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வதா? என்பது குறித்து பிரதமர் விவாதிக்கக்கூடும் என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நடத்தும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று அறிவித்தார்.

மூலக்கதை