வேகமாக பரவி வரும் கொரோனா சென்னையில் 2 பேர் பலி: தமிழகத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
வேகமாக பரவி வரும் கொரோனா சென்னையில் 2 பேர் பலி: தமிழகத்தில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் ெகாரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்கல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் தற்போது பலி எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் நபராக கடந்த வாரம் பலியானார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 52 வயதான முதியவர் நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோல் டெல்லி மாநாடு சென்று வந்த 56 வயது ஆண், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரது 52 வயது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.25 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பெண்ணையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி 3 ஆக உயர்ந்தது.மேலும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த 71 வயது தொழிலதிபர், வெளிநாடுகளுக்கு கடல் அட்டையை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழில் சம்பந்தமாக துபாய் சென்று, இந்தியா திரும்பியுள்ளார். பிறகு காய்ச்சல் மற்றும் இருமல் என கொரோனா அறிகுறிகளுடன் அவதிப்பட்டுள்ளார். இதனால் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா இருப்பது யாருக்கும் தெரியாது. இதனால் மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உறவினர்கள், உடலை சொந்த ஊரான கீழக்கரைக்கு எடுத்து சென்று இறுதி மரியாதை செய்துள்ளனர். இறுதிச்சடங்கில் 300க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், ரத்த பரிசோதனை முடிந்து நேற்று முடிவு வந்தது. அதில், அவருக்கு கொரோனா இருந்ததும், அதனால்தான் இறந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த உறவினர்கள் மற்றும் இறுதி சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டை காட்பாடா தெருவை சேர்ந்த 61 வயது முதியவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு, சென்னை திரும்பியுள்ளார். அவருக்கு கடும் காய்ச்சல், இருமல் என கொரோனா அறிகுறிகள் இருந்ததால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அவருடைய வீடு, சமீபகாலமாக அவருடன் பழக்கத்தில் இருந்தவர்கள், சென்று வந்த இடம் என அனைத்தையும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் உறவினர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 3 ஆக இருந்த பலி எண்ணிக்கை, நேற்று 5 ஆக உயர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை