கர்நாடகாவில் இருந்து திரும்பிய மீனவர்களை தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: சாயல்குடி அருகே பரபரப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் இருந்து திரும்பிய மீனவர்களை தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்: சாயல்குடி அருகே பரபரப்பு

சாயல்குடி: கர்நாடகாவிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை சாயல்குடி அருகே தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்கள் இருவரும் முதுகுளத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கொரோனா ஊரடங்கு எதிரொலியால் நேற்று முன்தினம் கடல் மார்க்கமாக நாட்டு படகில் சாயல்குடி அருகே மூக்கையூருக்கு அவர்கள் வந்தனர். இதில் இருவர் மட்டும் சாயல்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் இறங்கினர். தகவலறிந்து சென்ற கடலாடி தாசில்தார் முத்துக்குமார், மீனவர்கள் இருவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தினார். அங்கு வந்த மருத்துவக்குழுவினர் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனர். இதில், கொரோனா அறிகுறி இல்லை என தெரியவந்தது. இருந்தபோதிலும் மீனவர்கள் இருவரையும் தனிமைப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். இதனையடுத்து மூக்கையூர் அருகே கன்னிகாபுரி இயற்கை பேரிடர் காப்பக கட்டிடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதையறிந்த கன்னிகாபுரி கிராம மக்கள், மீனவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருவரையும் முதுகுளத்தூர் அழைத்துச் சென்றனர். அங்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே தங்கியுள்ள மீனவர்களுடன் இருவரும் தங்க வைக்கப்பட்டனர்.

மூலக்கதை