கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் பலி 85 ஆக உயர்ந்தது: 3,577 பேருக்கு பாதிப்பு ,.. மகாராஷ்டிரா முதலிடம்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் பலி 85 ஆக உயர்ந்தது: 3,577 பேருக்கு பாதிப்பு ,.. மகாராஷ்டிரா முதலிடம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக அதிகரித்துள்ளது.  உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியும் கொரோனா மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தக்கோரி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசி வருகிறார். நாளை மறுநாள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடன் இது தொடர்பாக கலந்து ஆலோசிக்க உள்ளார். இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கொரோனா தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதில் மாகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. குஜராத்தில் 11, தெலங்கானாவில் 7, மத்திய பிரதேசம் 9, டெல்லியில் 7 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று இறந்த 2 பேருடன் சேர்த்து, பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப்பில் 5 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 4, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், கேரளாவில் தலா 2, ஆந்திரா, பீகார், இமாச்சலில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிராவே முதலிடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, 485 பேருடன் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதுவரை கேரளாவில் 306, தெலங்கானாவில் 269, உத்தர பிரதேசத்தில் 227, ராஜஸ்தானில் 200, ஆந்திராவில் 161, கர்நாடகாவில் 144, குஜராத்தில் 105, மத்திய பிரதேசத்தில் 104, ஜம்மு காஷ்மீரில் 92, மேற்கு வங்கத்தில் 69 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றைத் தொடர்ந்து, பஞ்சாபில் 57, அரியானாவில் 49, பீகாரில் 30, அசாமில் 24, உத்தரகாண்டில் 22, ஒடிசாவில் 20, சண்டிகரில் 18, லடாக்கில் 14 பேரும் சட்டீஸ்கரில் 9, கோவாவில் 7, இமாச்சலில் 6 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். புதுச்சேரியில் 5, ஜார்கண்ட், மணிப்பூரில் தலா 2, மிசோரம், அருணாச்சலில் தலா ஒருவர் மட்டுமே கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே நாடு முழுவதும் உள்ள 19,460 சிறப்பு உணவு முகாம்களில் 75 லட்சத்துக்கும் மேற்பட் டோருக்கு உணவு வழங்கப் படுவதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்ய சலீலா வத்சவா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை