அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் இறப்பு எண்ணிக்கை மோசமாக இருக்கும்: அதிபர் டிரம்ப் அச்சம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் இறப்பு எண்ணிக்கை மோசமாக இருக்கும்: அதிபர் டிரம்ப் அச்சம்

வாஷிங்டன்: ‘அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டதாலும், பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி விட்டதாலும், அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை மிக மோசமானதாக இருக்கும்.’ என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மொத்தம் 3 லட்சத்து 915 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,162 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 40 மாகாணங்களில் பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், 33 கோடி அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.  நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட் ஆகியவை கொரோனா பரவலின் மையமாக உள்ளன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கொரோனா நிலவரம் குறித்து நேற்று முன்தினம் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘நாடு இதுவரை பார்க்காத மிக கொடூரமான காலக் கட்டத்துக்குள் நாம் வந்துள்ளோம். அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை மிக மோசமானதாக இருக்கும்.  முடிந்தளவு நாம் இதை குறைக்க வேண்டும். இதில் நாம் வெற்றி பெறுவோம். இந்தளவுக்கு பலி எண்ணிக்கையை நாம் பார்த்ததில்லை. உலகப் போர் காலத்தில் இதுபோல் இருந்திருக்கலாம். இது தனக்குள்ளேயே நடக்கும் போர். இது கொடூரமானது,’’ என்றார்.  துணை அதிபர் பைக் பென்ஸ் கூறுகையில், ‘‘நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். பலி எண்ணிக்கை அதிகரிப்பதால், மக்கள் மனம் தளரக் கூடாது. வரும் நாட்களில் இன்னும் அதிகரித்தாலும் நாம் மனம் தளரக் கூடாது. நாடு முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர்,’’ என்றார்.  வெள்ளை மாளிகையில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு குழுவினர் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் அடுத்த 2 மாதத்தில் பலி எண்ணிக்கை ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கலாம். இந்த நிலையை தவிர்க்க, நாம் சமூக இடைவெளியை பின்பற்றி, வீட்டுக்குள் இருக்க வேண்டும்,’’ என்றனர். நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு அளித்த பேட்டியில், ‘‘நியூயார்க்கில் கொரோனா பரவல் அடுத்த வாரத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கும். இதன் பின் இந்த தாக்கம் குறையத் தொடங்கும்,’’ என்றார். 1000 வென்டிலேட்டர்  வழங்கியது சீனா:சீனாவில் இ-வர்த்தகத்தில் ஈடுபடுட்டுள்ள அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர்கள் ஜேக் மா, ஜோசப் டிசாய் ஆகியோர் நியூயார்க் நகருக்கு ஆயிரம் வென்டிலேட்டர்களை விமானம் மூலம் நேற்று முன்தினம் அனுப்பினர். இது தவிர, அமெரிக்காவின் ஒரேகான் மாகாணம், நியூயார்க்குக்கு 140 வென்டிலேட்டர்களை தானாக முன்வந்து அனுப்பியுள்ளது. இங்கு 1 லட்சத்த 13 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 15 ஆயிரம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,500 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மட்டும் இங்கு 630 பேர் பலியாயினர். நியூயார்க்  நிர்வாகம் 17 ஆயிரம் வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் 2,500 மட்டுமே தற்போது வந்துள்ளது. அமெரிக்காவின் பிற மாகாணங்களும் நியூயார்க் நகருக்கு வென்டிலேட்டர்கள் அனுப்பும்படி ஆளுநர் ஆன்ட்ரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.சீனாவிலிருந்து வந்த  4 லட்சம் பேர்தான் காரணம்கொரோனா பரவும் விஷயத்தை கடந்தாண்டு டிசம்பர் இறுதியில்தான் சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தீவிரம் பற்றி சீன அதிகாரிகள் சரியாக தகவல் தெரிவிக்காததால், கடந்த ஜனவரி 15ம் தேதி வரை சீனாவில் இருந்து அமெரிக்கா வந்தவர்களிடம் விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தப்படவில்லை.  கொரோனா பரவல் பற்றி சீனா அறிவித்த 2 மாதங்களுக்குப் பின்புதான் பயண தடையை அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இந்த இடைப்பட்ட காலத்தில் சீனாவில் இருந்து 1,300 நேரடி விமானங்கள் மூலம் அமெரிக்காவின் 17 நகரங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இதில், வுகானிலிருந்து 4 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இவர்களால்தான் அமெரிக்காவில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில்  மேலும் 7 பேர் பலிஇந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று மாலை வரையிலான 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் மேலும் 203 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 784 ஆக அதிகரித்தது. மும்பையில் 2 பேர் உட்பட மாநிலத்தில் மேலும் 7 பேர் கொரோனா வைரசுக்கு பலியானதை தொடர்ந்து இந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் நேற்று உயிரிழந்தவர்களில் ஒருவர் ஒர்லி கோலிவாடா பகுதியில் உள்ள ஜீஜாமாதா நகரைச் சேர்ந்தவராவார். அங்கும் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால், மும்பையின் கொரோனா மையப்பகுதியாக அது மாறியுள்ளது. அங்கு அனைத்து இடங்களும் சீல்வைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை