இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகளால் ஏப்ரல் இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும்: பரபரப்பு தகவல்கள்

தினகரன்  தினகரன்
இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகளால் ஏப்ரல் இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும்: பரபரப்பு தகவல்கள்

சென்னை: இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகவும் பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், ஏப்ரல் இறுதியில் இருந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதற்கு இந்திய சுகாதார உள்கட்டமைப்பின் குறைபாடுகளே காரணம் என்றும் இப்போது தெரிய வந்துள்ளது. பயணம் குறித்த ஆலோசனைகள், விமான நிலையங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியன. என்றாலும் பொது சுகாதார நிபுணர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைத்துக் கூறுதல் பற்றி கவலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐசிஎம்ஆர் நடத்திய குறைந்த எண்ணிக்கையிலான சாம்பிள்கள் மீதான பரிசோதனைகள் சமூகப் பரவல் நடக்கவில்லை என்று முடிவுசெய்ய போதுமானவை அல்ல என்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ‘நாடுகள் தனிமைப்படுத்தவேண்டும், பரிசோதிக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும், தொற்றின் தடம் காணவேண்டும்’ என்று சொல்கிறது. இதை இந்திய அரசாங்கம் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் மோசமான பொது சுகாதார அமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதமாக மிகக் குறைவான தொகையே பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கவலைகள் எழுகின்றன. மிக முன்னேறிய பொதுச் சுகாதார அமைப்பும், சேவைகளும் கொண்ட மேற்கத்தியப் பொருளாதாரங்களில், அவற்றை மீறி கோவிட் - 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்தியாவின் சுகாதார அமைப்பு, சேவைகளின் தயார்நிலை குறித்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட அளவில் கூடுதலான பரிசோதனை வசதிகள், ஏழை, எளியோருக்கு அதிக சமூக, பொருளாதார ஆதரவு ஆகியவற்றுக்கு பதிலாக, தாமே சொந்தமாகப் பார்த்துக் கொள்ளுதல், தனிமைப்படுதல், ஒதுங்கியிருத்தல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருவது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்தியாவில் குறைவான அளவு சோதனை நடத்துவதற்கு, சோதனை உபகரணங்கள் பற்றாக்குறையை பல காரணங்களுள் ஒன்றாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பொது சுகாதார நிபுணர்கள், இந்தப் பிரச்னையை அரசாங்கம் முன்னதாகவே தீர்த்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஐசிஎம்ஆரின் கீழ் வைரஸ் ஆய்வு மற்றும் கண்டறியும் 85 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை கோவிட் - 19 வைரசுக்காக சோதனைகள் செய்கின்றனவா என்று தெரியவில்லை.கோவிட் - 19ஆல் பாதிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 10% மக்களை ஐசியுவில், வெண்டிலேட்டரில் வைக்க வேண்டும். ஆனால் வெண்டிலேட்டர்களின் பற்றாக்குறை, முழுமையான வசதிகள் கொண்ட ஐசியுக்களின் பற்றாக்குறை ஆகியவை நமக்கு பெரிய சவால்கள். இந்திய சுகாதார ஆய்வுத் துறையின்படி, இந்தியா இதுபோன்ற சவால்களை நிபா (2001, 2007, 2018), ஏவியன் இன்ஃபுளுயன்ஸா H5N1 (2006), சிக்கன்குனியா (2006), பெரும்தொற்று இன்ஃபுளுயன்ஸா (2009), எபோலா (2013), ஜிகா (2016) என்று பலமுறை சந்தித்திருக்கிறது. 2019 தேசிய சுகாதார அறிக்கையின்படி, இந்தியாவில் சராசரியாக 10,926 நபர்களுக்கு ஓர் அரசாங்க அலோபதி மருத்துவர் இருக்கிறார். சுமார் 8.6 லட்சம் துணை செவிலியர், பிரசவ தாதிகள், சுமார் 20 லட்சம் பதிவு யெற்ற செவிலியர் உள்ளனர்.130 கோடி மக்கள்தொகைக்கு வெறும் 25,778 அரசு மருத்துவமனைகளும், 7,13,986 படுக்கைகளும்தான் உள்ளன. தொற்றுநோய்கள், இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்கான நிதி ஒதுக்கீடு எந்த ஆண்டிலும் ரூ.100 கோடியைத் தாண்டியதில்லை. உண்மையில் 2016லிருந்து இதற்கான செலவு ரூ.50 முதல் ரூ.60 கோடி வரை ஆகிறது. 2019 தேசிய சுகாதார அறிக்கையின்படி பரவும் நோய்களின் காரணமாக, மொத்த நோய்களில் சுமார் 69.47% நோய்கள் கடும் மூச்சுத் திணறல் தொடர்பானவைகளாக உள்ளன. தொற்று நோய்கள் காரணமான மரணங்களில், 57.86% நிமோனியா மற்றும் மூச்சுத் திணறல் நோய்கள் காரணமாகவே நிகழ்கின்றன. மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணம் கடும் வயிற்றுப்போக்கு. இது 10.5% மரணங்களுக்குக் காரணமாக உள்ளது.சமூகத்தில் கோவிட் - 19 வைரஸ் தாக்குதல் உள்ள இந்நேரத்தில், அரசாங்கம், ‘குணப்படுத்துவதை விட தவிர்ப்பது மேல்’ என்ற வழியையே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது, ஆல்கஹால் உள்ள சானிடைசரைப் பயன்படுத்துவது, நேரடித் தொடர்பைத் தவிர்ப்பது நோய் பரவலைத் தடுக்கும் என்று சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும் என்பதாக பரவலைத் தடுக்கும் பொறுப்பு மக்கள் மீதே திணிக்கப்படுகிறது. மக்கள் தம் கைகளை சோப் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் திரும்பத் திரும்பச் சொல்லும் அறிவுரையை குடிக்க, குளிக்க மற்றும் இதர சுகாதாரத் தேவைகளுக்கு சுத்தமான நீர் கிடைக்கும் வாய்ப்புகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். தேசிய சுகாதார அறிக்கை 2018ன்படி, நாட்டில் 43.5% குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருக்கிறது. அதிலும் 32%தான் சுத்திகரிக்கப்பட்டது. சுமார் 33.5% குடும்பங்கள் அடி பம்புகளை நம்பியுள்ளன. 11% கிணற்று நீரை பயன்படுத்துகின்றனர். இதில் 9%, திறந்த கிணறுகள். 46.6% குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டுக்குள்ளேயே குடிநீர் வசதி இருக்கிறது. 35.8% வீட்டுக்கு அருகே குடிநீர் கிடைக்கிறது. 17.6% வீட்டுக்கு சற்று தூரத்தில்தான் குடிநீர் கிடைக்கிறது. எனவே, குழாயில் வந்துகொண்டே இருக்கும் சுத்தமான நீர் என்ற வசதி இல்லாத சூழலில், சோப் வைத்து கை கழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது என்பதெல்லாம் இந்தியச் சூழலில் மிக ஆடம்பரமான விஷயங்கள். கோவிட் - 19 அச்சம் அதிகரிக்கும் போது, முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றை நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது, வியாபாரிகள் அவற்றுக்கு அதிக விலை வைக்கிறார்கள்.ஊரடங்கு பயத்தில் பலரும் உணவு, மருந்து ஆகியவற்றை தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ளும்போது, கடைகளில் இவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. காய்கறி விலைகளும் ஏறுகின்றன. இரண்டு குறிப்பிட்ட ரக முகக் கவசங்களுக்கு கடைக்காரர்கள் ரூ.8 மற்றும் ரூ.10ற்கு மேல் விற்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல, 200மிலி சானிடைசரின் விலை ரூ.100 மட்டும்தான். எனினும், இப்படி விலை குறைக்கப்பட்டாலும் கூட, சானிடைசரை வாங்குவதற்கு பலருக்கும் வசதி இல்லை. வாங்க இயலாதவர்களுக்கு இவற்றை இலவசமாக வழங்க அரசாங்கத்திடமிருந்து எந்த உறுதிமொழியும் இல்லை. கோவிட் - 19ஆல் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் ஒரு திடீர் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள பெரிதும் தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய சுகாதார அமைப்பு தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த தொற்றுப்பரவல், அரசாங்கம் பொது சுகாதாரத்தின் மீது அக்கறை செலுத்தி, தனியார்களை நம்பி இருப்பதைக் குறைத்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக பொதுத் துறை மருந்து உற்பத்தித் துறையை பலப்படுத்தி, அதில் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும்.சமூகத்தில் கோவிட் - 19 வைரஸ் தாக்குதல் உள்ள இந்நேரத்தில், அரசாங்கம், ‘குணப்படுத்துவதை விட தவிர்ப்பது மேல்’ என்ற வழியையே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது, ஆல்கஹால் உள்ள சானிடைசரைப் பயன்படுத்துவது, நேரடித் தொடர்பைத் தவிர்ப்பது நோய் பரவலைத் தடுக்கும் என்று சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும் என்பதாக பரவலைத் தடுக்கும் பொறுப்பு மக்கள் மீதே திணிக்கப்படுகிறது.

மூலக்கதை