அமெரிக்காவை அழிக்கிறது கொரோனா ஒரே நாளில் 1,500 பேர் பலி: உலகில் இதுவரை எங்கும் நடக்காத பயங்கரம் ,..நியூயார்க்கில் 2 நிமிடத்துக்கு ஒருவர் சாவு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவை அழிக்கிறது கொரோனா ஒரே நாளில் 1,500 பேர் பலி: உலகில் இதுவரை எங்கும் நடக்காத பயங்கரம் ,..நியூயார்க்கில் 2 நிமிடத்துக்கு ஒருவர் சாவு

வாஷிங்டன்: உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஒரேநாளில் 1,480 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கின்றனர். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக கொரானோ வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் உச்சகட்டமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,480 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பலி ஏற்பட்டதில்லை. அதே போல், ஒரே நாளில் புதிதாக 32,000 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்கா முழுவதுமே மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 78,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,159 பேர் இறந்துள்ளனர். இன்னும் சுமார் 6,000 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது நியூயார்க் மாகாணம்தான். அங்கு மட்டுமே ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 595 பேர் இறந்துள்ளனர். இந்த மாகாணத்தில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நியூயார்க் மேயர் ஆன்ட்ரு கியுமோ, ‘‘இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள எங்களுக்கு உதவிகள் வேண்டும். கடந்த 3 நாளில் பலி எண்ணிக்கை 2 மடங்காகி உள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசம், உடல் முழுவதையும் மூடும் ஆடைகள் பற்றாக்குறை உள்ளது. வென்டிலேட்டரும் அதிகளவில் தேவைப்படுகிறது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனாலும், மக்கள் மடிவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்,’’ என்றார்.இதற்காக, தனது மாகாணத்திற்குள் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தேவைப்படாத மருத்துவமனை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அவற்றை அரசு வாங்கிக் கொள்ளும் நிர்வாக உத்தரவில் கியுமோ கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணியில் ராணுவத்தை இன்னும் அதிகளவில் ஈடுபடுத்த இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும், அது தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.மாஸ்க் அணிய மாட்டேன்: அடம்பிடிக்கிறார் டிரம்ப்கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள், வைரஸ் தொற்று இருப்பவர்களை கவனித்துக் கொள்பவர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்தால் போதும் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. தற்போது, உலகம் முழுவதும் வைரஸ் தீவிரம் அடைந்துள்ளதால், கவனக்குறைவால் ஏற்படும் வைரஸ் பரவலை தடுக்க வெளியில் வரும் அனைவருமே முகக் கவசம் அல்லது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டுமென ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவிலும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமென அந்நாட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மையமும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிபர் டிரம்ப்பும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஆனால், அவர் மட்டும் அணிய மறுத்து வருகிறார். ‘என்னை சந்திக்க வருபவர்களை முகக் கவசத்தோடு வரவேற்க என்னால் முடியாது. புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்தாலும், நான் முகக் கவசம் அணிய மாட்டேன்,’ என்று அவர் கூறியுள்ளார்.இரட்டை கோபுரத்தைமுந்தியது கொரோனாஅமெரிக்க வரலாற்றில் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலே மிகக் கோரமான சம்பவமாக இருந்தது. அத்தாக்குதலில் 2,977 பேர் பலியாகினர். 25,000 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை கொரோனா மிஞ்சி விட்டது. நியூயார்க் நகரை ஒட்டுமொத்தமாக ஆட்கொண்டுள்ள கொரோனா, அம்மாகாணத்தில் மட்டுமே இதுவரை 1 லட்சம் பேரை பாதித்து, 3,218 பேரை பலி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தாலியை முந்தியது ஸ்பெயின்உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி விட்டது. இதில், 2.78 லட்சம் பேருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஸ்பெயின் 1 லட்சத்து 25 பேருடன் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இத்தாலியை முந்தி 2வது இடத்தை நேற்று பிடித்தது. ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 806 பேர் பலியாயினர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 11,744 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை இத்தாலி 14,681 பேருடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுடன் பிரான்சிலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் பிரான்சில் 1,120 பேர் பலியாகினர். அங்கு மொத்த பலி 6,507 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பலி 3,605 ஆக அதிகரித்துள்ளது.திட்டமிட்டபடி நவம்பரில் அதிபர் தேர்தல்அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வரும் நவம்பரில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால், இம்முறை தேர்தலில் தபாலில் ஓட்டு போதும் வசதி கொண்டு வரப்படுமா என அங்கு விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘தபாலில் ஓட்டு போடுவது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களித்தால் மட்டுமே நேர்மையான தேர்தலை நடத்த முடியும்,’’ என்றார். மேலும், திட்டமிட்டப்படி நவம்பர் 3ம் தேதி பொதுத்தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை