வருவாய் குறைந்ததால் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
வருவாய் குறைந்ததால் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடத்தின் 365 நாட்களும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும். இதன் காரணமாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் சாதாரண நாட்களில் 2 முதல் 3 கோடியும், உற்சவ நாட்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நிறைந்த வார விடுமுறை நாட்களில் 5 கோடி வரையும் காணிக்கை செலுத்தி வந்தனர். உண்டியல் காணிக்கை மூலம் மட்டும் மாதத்திற்கு ₹100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது.  இது தவிர பக்தர்களுக்கு வாடகைக்கு விடக் கூடிய அறைகள் மூலம் வருவாய், லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட் விற்பனை மூலம் வருவாய் என ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் பட்ஜெட் தயார் செய்யப்பட்டு தேவஸ்தான நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் 21ம் தேதி முதல் திருப்பதி கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தேவஸ்தானத்திற்கு வருமானம் குறைந்துள்ளது. வரும் 14ம் தேதி வரை இதே நிலை தொடர உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளதால் ஆந்திர அரசுக்கு வரும் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், நிதிநிலை மிகவும் மோசமடைந்து உள்ளதால்  அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் தற்காலிகமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை பின்பற்றி, தேவஸ்தான ஊழியர்களுக்கும் மார்ச் மாதத்திற்கான   சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சம்பளம் நிதிநிலை சரியான பிறகு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை