இந்தியாவில் நடைபெற இருந்த யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு: பிபா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் நடைபெற இருந்த யு17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு: பிபா அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ அறிவித்துள்ளது.இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தொடர் நவம்பர் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற இருந்தது. கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், அகமதாபாத், நவி மும்பை ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமிறங்க அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், முதல் முறையாக இந்திய அணி பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தது.இந்த நிலையில், உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஒலிம்பிக்ஸ், யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் உட்பட பல்வேறு முக்கியமான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. விம்பிள்டன் டென்னிஸ் உட்பட சில தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற இருந்த யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிபா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பனாமா - கோஸ்டா ரிகாவில் நடைபெற இருந்த பிபா யு-20 மகளிர் உலக கோப்பை தொடரும் (ஆகஸ்ட் - செப். 2020) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியதும், இந்த தொடர்களுக்கான புதிய அட்டவணை வெளிடப்படும் என்று பிபா தெரிவித்துள்ளது.

மூலக்கதை