மத்திய அரசு புதிய வியூகம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களில் தொகுப்பு திட்டம்: 211 மாவட்டங்களில் அமலாகிறது

தினகரன்  தினகரன்
மத்திய அரசு புதிய வியூகம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களில் தொகுப்பு திட்டம்: 211 மாவட்டங்களில் அமலாகிறது

புதுடெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ‘தொகுப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, இதை கட்டுப்படுத்த 11 உயர்நிலைக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அவர்களுடன் கொரானாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, டெல்லி மற்றும் லடாக்கில் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க, ‘தொகுப்பு திட்டம்’ என்ற கட்டுப்பாட்டு திட்டத்தை மத்தியங அரசு தயாரித்துள்ளது. நாடு முழுவதும் 211 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. இங்கு நோய் மேலும் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இதனால், இந்த பகுதிகளை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்தி, நோய் பரவாமல் தடுக்கும் யுக்திகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் ‘தொகுப்பு திட்டம்’ யுக்தி. * இந்த தொகுதிப்பு திட்டத்தில், பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தனிப்படுத்தப்படும். இங்கு, சமூக இடைவெளி முறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்.* கண்காணிப்பை தீவிரமாக்கி, இப்பகுதியில் சந்தேக நபர்கள் அனைவரையும் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். * பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் ஒரு பகுதியில் இருந்து கொரோனா தொற்று அடுத்த பகுதிக்கு செல்லாதவாறு கட்டுப்படுத்தப்படும்.  இத்தகவலை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.பாதித்தவர்கள் 3,072; பலி எண்ணிக்கை 75இந்தியாவில் கடந்த வாரம் 19 உயிரிழப்புகளுடன் 900 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று 3.072 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்களில் 1043 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 17 மாநிலங்களில் உள்ள  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டுமே அதிகபட்சமாக 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 490 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 26 பேர் பலியாகி உள்ளனர். 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 3வது நாளாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் ேபானில் பேச்சுகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி மூலமாக நேற்று உரையாடினர். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘நாங்கள் சிறந்த உரையாடலை மேற்கொண்டோம். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து முழு வலிமையுடன் கொரோனா வைரசை எதிர்த்து போராட உறுதி ஏற்றுள்ளோம்,’ என்றார்.8ம் தேதி ஆலோசனை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் காணொளி காட்சி மூலம் ஆலோசித்து வருகிறார். அதேபோல், நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் வரும் 8ம் தேதி காணொளி காட்சி மூலம் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், தங்கள் ஆலோசனைகளை நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் தெரிவிக்க உள்ளனர்.

மூலக்கதை