கை, கால் நடுக்கத்துடன் வந்தவருக்கு 2 புல் விஸ்கியை பரிந்துரை செய்து வாங்கிக் கட்டிக் கொண்ட டாக்டர்: அத்தியாவசிய பொருளா? என கேள்வி

தினகரன்  தினகரன்
கை, கால் நடுக்கத்துடன் வந்தவருக்கு 2 புல் விஸ்கியை பரிந்துரை செய்து வாங்கிக் கட்டிக் கொண்ட டாக்டர்: அத்தியாவசிய பொருளா? என கேள்வி

ஷில்லாங்:  மேகாலயாவில் குடிபழக்கம் உடைய ஒருவருக்கு 2 புல் விஸ்கியை குடிக்க  பரிந்துரைத்த பல் டாக்டருக்கு, கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் ஊரடங்கால், ‘குடிமகன்’கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். போதைக்கு அடிமையானவர்களில் சிலர், மது கிடைக்காமல் தற்கொலையும் செய்துள்ளனர். போதை ஏற்ற முடியாததால், குடிமகன்கள் கடுமையான மன  உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்  பரிந்துரையின்படி மது வழங்க கேரள அரசு ஆலோசித்தது. இதற்கு பல தரப்பிலும்  எதிர்ப்பு கிளம்பவே அந்த ‘ஐடியா’வை கிடப்பில் போட்டது. மேகாலயாவிலும் அரசு  பிறப்பித்த இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.இந்நிலையில்,  ஷில்லாங்கில் உள்ள தான்கெட்டி பகுதியை சேர்ந்த டாக்டர் புர்கயஸ்தாவிடம்  குடி பழக்கம் உடைய ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அவரிடம் குடியை திடீரென  நிறுத்துவதால் ஏற்படும் கை, கால் நடுக்கம், கோபம், எரிச்சல் உள்ளிட்ட  பாதிப்பு காணப்பட்டது. இதனால், புர்கயஸ்தா அவருக்கு 2 புல் பாட்டில் விஸ்கி குடிக்கும்படி பரிந்துரை செய்து, மருந்து சீட்டு கொடுத்தார்.  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே மக்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதனால், ‘விஸ்கி என்ன அத்தியாவசிய பொருளா?’ என மருத்துவர்கள்  உட்பட பல்வேறு தரப்பினரும் புர்கயஸ்தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே  நேரம், மது மறுவாழ்வு மைய மருத்துவர் பிரையன் ஜோன்ஸ், `குடிபழக்கம் உடைய ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மதுபானங்களை  பரிந்துரைப்பது தவறில்லை,’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை