எப்போது வெளியே சென்றாலும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
எப்போது வெளியே சென்றாலும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘இனி வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானது என்பதால், மக்கள் அத்தியாவசிய தேவைக்காக எப்போது வெளியே சென்றாலும், குறைந்தப்பட்சம் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும்,’ என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே மருத்துவ தரத்திலான முகக் கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், சாதாரண துணிகளில் செய்யப்பட்ட முகக்கவசங்கள் அல்லது வீட்டில் காட்டன் துணிகளை கொண்டு தயாரித்த முகக் கவசங்களை பயன்படுத்தும்படி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஏற்கனவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.இந்நிலையில், நம் நாட்டிலும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது. பலி 68 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில், ‘சமூக தொற்று’ எனப்படும் ஆபத்தான 3ம் நிலையை நாடு இன்னும் எட்டவில்லை. அந்த நிலைமை வரும்போது, நாட்டில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். தற்போது, முடக்கம் அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. இதனால், கொரோனா நோய் தொற்று அபாயம் கணிசமாக உயரும் வாய்ப்புகள் இருக்கிறது. இதை மக்கள் உணராவிட்டாலும், இதன் பின்விளைவுகளை நினைத்து மத்திய, மாநில அரசுகள் பெரிதும் கவலை கொண்டுள்ளன.இந்நிலையில், இந்தியாவிலும் நாட்டிலும் மருத்துவ தரத்திலான முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மத்திய அரசு நேற்று வெளியிட்ட மருத்துவ ஆலோசனைகளில், ‘மக்கள் எப்போது வெளியே சென்றாலும், மூக்கையும் வாயையும் மூடும் வகையிலான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்,’ என வலியுறுத்தப்பட்டு உள்ளது.தயாரிப்பது எப்படி?பயன்படுத்திய சுத்தமான பருத்தி துணிகளை, வீட்டில் முகக்கவசம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதற்கு நிறம் முக்கியமல்ல. அந்த துணியை வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்து, நன்கு துவைத்து காய வைத்ததாக இருக்க ேவண்டும். முகக்கவசம் தயாரிக்கும்போது, முகத்தில் இடைவெளி ஏற்படாமல், கச்சிதமாக பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும். பயன்படுத்தும் முறைமுகக் கவசம் அணியும் முன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பயன்படுத்திய முகக் கவசத்தை சுத்தம் செய்யாமல் மீண்டும் அணியக் கூடாது. இவற்றை ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஒருவர் பயன்படுத்தும் முகக் கவசத்தை வீட்டில் உள்ள மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்தனி முகக் கவசம் அணிய வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள மற்ற ஆலோசனைகளின் விவரம் வருமாறு:* வீட்டில் தயாரித்த முகக் கவசங்களை பயன்படுத்துவது, ஒட்டு மொத்த சுகாதாரத்தையும் கடைப்பிடிக்க உதவும்.* இந்த முகக் கவசங்களை சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தக் கூடாது. இவர்கள் மருத்துவ தரத்திலான முககவசங்களை அணிய வேண்டும். * நோய் பாதிப்பு இல்லாதவர்கள், சுவாச பிரச்னை இல்லாதவர்கள் கையால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை பயன்படுத்தலாம். குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில், முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை