கேப்டன் கனவில் ஸ்ரேயாஸ் ஐயர் | ஏப்ரல் 04, 2020

தினமலர்  தினமலர்
கேப்டன் கனவில் ஸ்ரேயாஸ் ஐயர் | ஏப்ரல் 04, 2020

புதுடில்லி: ‛‛இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் எண்ணம் உள்ளது. ஆனால் இப்போதைக்கு அதுகுறித்து எவ்வித சிந்தனையும் எனக்கு கிடையாது,’’ என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

இந்திய அணி இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 24. கடந்த 2017 ல் நியூசிலாந்துக்கு எதிரான ‛டுவென்டி-20’ போட்டியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக உள்ள ‛நம்பர்-4’ பேட்டிங் பிரச்னையை தீர்க்கும் வகையில், ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய ஒருநாள், ‛டுவென்டி-20’ அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். 

தவிர ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி கேப்டனாகவும் உள்ளார். எதிர்கால திட்டம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது:

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் எண்ணம் உள்ளது உண்மை தான். ஆனால் இப்போதைக்கு அதுகுறித்து எவ்வித சிந்தனையும் கிடையாது. இப்போது என்ன உள்ளதோ அதை மட்டுமே நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று மட்டும் முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ‛பந்தை பார், அதை விளாசு’ என்பது தான் எனது தத்துவம்.

ஒருமுறை நான்கு நாள் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன்.  எனது ஆட்டத்தை பார்க்க ராகுல் டிராவிட் வந்திருந்தார். அன்று தான் என்னை அவர் முதன் முதலில் பார்த்தார். முதல் நாள் கடைசி ஓவர், அப்போது 30 ரன்கள் எடுத்திருந்தேன். கடைசி  ஓவர் என்பதால் எப்படியும் கவனமாகத் தான் விளையாடுவர் என எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர். நானும் அப்படித்தான் விளையாடினேன்.

அப்போது பந்து அடிப்பதற்கு வசதியாக வந்தது. கிரீசை விட்டு இறங்கி வேகமாக அடிக்க, பந்து சிக்சராக சென்றது. ‛டிரசிங் ரூமில்’ இருந்த அனைவரும் இறங்கி மைதானத்துக்குள் ஓடி வந்து விட்டனர். நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை அன்று ராகுல் பார்த்து விட்டார். நேராக என்னிடம் வந்த அவர்,‛ பாஸ்... என்ன இது, கடைசி ஓவரில் இப்படி விளையாடுகிறீர்கள்,’ என்றார். பிறகு தான் அவர் என்ன ‛அட்வைஸ்’ செய்தார் என்பதை உணரத் துவங்கினேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை