நீங்களும் போர் வீரர்கள்: நாட்டு மக்களுக்கு புஜாரா ஊக்கம் | ஏப்ரல் 04, 2020

தினமலர்  தினமலர்
நீங்களும் போர் வீரர்கள்: நாட்டு மக்களுக்கு புஜாரா ஊக்கம் | ஏப்ரல் 04, 2020

புதுடில்லி: ‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் போர் வீரர்கள்,’’ என, இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சமீபத்தில் சச்சின், கங்குலி, கோஹ்லி, சிந்து உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுடன் ‘வீடியோ கான்பெரன்சிங்’ முறையில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா விழிப்புணர்வை தொடருங்கள் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறியது: பிரதமர் மோடி, விளையாட்டு நட்சத்திரங்களின் போராடும் குணத்தை பொது மக்களுக்கும் கற்றுத் தர வலியுறுத்தினார். ஊரடங்கு உத்தரவை பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். இன்னும் சிலர், கொரோனா வைரஸ் தொற்றை சாதாரணமாக நினைக்கின்றனர். அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதை உணரவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒவ்வொரு தனி மனிதனும் போர் வீரர் தான். நீங்கள் வீட்டிலேயே இருந்து, உங்கள் நாட்டுக்காக போரிடுகிறீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் மட்டுமே இப்போரில் வெல்ல முடியும்.

தற்போது ஓய்வில் இருப்பதால் மகளுடன் நீண்ட நேரம் செலவிடுகிறேன். அனைத்து விஷயங்களையும் நேர்மறையான வழியில் எடுத்துக் கொள்கிறேன். வீட்டிலேயே ‘ஜிம்’ இருப்பதால் உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். யோகா, தியானம் செய்கிறேன்.

ஆஸ்திரேலிய தொடருக்கு முன், நிறைய முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளேன். தற்போது விளையாட்டு குறித்து சிந்திக்க கூடாது. முதலில், கொரேனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். இயல்புநிலைக்கு திரும்பிய பின் தான் கிரிக்கெட் குறித்து நினைத்து பார்க்க முடியும்.

இவ்வாறு புஜாரா கூறினார்.

மூலக்கதை