கொரோனா எதிரொலி : நாய், பூனை இறைச்சிக்கு தடை விதித்தது சீன நகரம் ; மே 1 தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா எதிரொலி : நாய், பூனை இறைச்சிக்கு தடை விதித்தது சீன நகரம் ; மே 1 தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு

பெய்ஜிங் : சீனாவில் பூனை மற்றும் நாய் இறைச்சி வாங்கவும் விற்கவும் தடை செய்த முதல் நகரமாக ஷென்ஸென் நகரம் மாறியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 59,203 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,28,990 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை ,பாம்பு மற்றும் வௌவ்வால் கறிகள் விற்பனை சமீபத்தில் களைகட்ட தொடங்கியது. ஆண்டுக்கு 1 கோடி நாய்களும் 40 லட்சம் பூனைகளும் சீனாவில் கொல்லப்பட்டு இறைச்சி விற்பனை வணிகம் நடக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்தனர்.ஷென்ஸென் நகரம், வன விலங்குகளோடு நாய் மற்றும் பூனை இறைச்சியையும் விற்கக் கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1 முதல் அமலுக்கு வர உள்ளது.விலங்குகள் நல அமைப்பான ஹெச்எஸ்ஐ இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளது.

மூலக்கதை