கொரோனாவை வென்று காட்டிய இங்கிலாந்து நபர்: உற்சாகமாக வழி அனுப்பிவைத்த மருத்துவக் குழு

தினகரன்  தினகரன்
கொரோனாவை வென்று காட்டிய இங்கிலாந்து நபர்: உற்சாகமாக வழி அனுப்பிவைத்த மருத்துவக் குழு

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தொடர் சிகிச்சையால் குணடைந்து வீடு திரும்பினார். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 60,112 பேர் உயிரிழந்துள்ளனர். 11,30,089 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  2,34,023 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 39,444 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 95% பேர் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்களே. 5% பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிதமான பாதிப்புள்ளவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உயிர்பிழைப்பது அரிதாகிறது. இந்த வருத்தத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில் இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மீண்டு ஒருவர் குணமடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிசெஸ்டர் நகரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 7 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்துள்ளார். இந்நிலையில் டிஸ்சார்ஜும் செய்யப்பட்டார். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் இருபுறமும் வரிசையாக நின்று கைகளைத் தட்டி உற்சாகமாக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளித்த குழுவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் மனைவி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை