கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2.13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததால், மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏப்.4-ம் தேதி இன்று தேசிய அளவில் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

மூலக்கதை