இறைச்சி கடைகளை மூடுவதற்கு குறித்து பரிசீலிக்கலாமே! மக்கள் கூட்டம் சேருவதை தடுக்க ஒரே வழி

தினமலர்  தினமலர்
இறைச்சி கடைகளை மூடுவதற்கு குறித்து பரிசீலிக்கலாமே! மக்கள் கூட்டம் சேருவதை தடுக்க ஒரே வழி

திருப்பூர்;கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இறைச்சி மற்றும் மீன் கடைகளை, மூட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்தியாவில் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் நோய் தொற்று தடுக்கப்பட்டுள்ளது. டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை என்றாலே, மக்கள் அனைத்தையும் மறந்து குஷியாகி விடுகின்றனர். கடந்த வாரத்தில், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூடிய கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாமல், போலீசாரே தடுமாறி விட்டனர்.ஊரடங்கு உத்தரவை உண்மையாக மதிப்பவர்கள், தேவையின்றி வெளியே தலைகாட்டுவதில்லை.
மாறாக, சில இளைஞர்கள் தேவையில்லாமல்,'டூவீலரில்' சுற்றியும், கூட்டமாக சேர்ந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.நேற்று காலை நிலவரப்படி, டில்லி சென்று வந்த, 69 பேர், மருத்துவமனை கொரோனா பிரிவு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாளையும், இறைச்சி வாங்க மக்கள் அதிகமாக கூடினால், கொரோனா நோய் பரவும் அபாயம் உள்ளது.
சமூக இடைவெளியை பின்பற்றாதபட்சத்தில், கூட்டம் சேரும் திருப்பூர் நகரப்பகுதியில் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளது.தேவையின்றி, அச்சத்துக்கு இடமளிக்காமல், இறைச்சிக்கடைகளுக்கு, 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்புள்ள சில மாவட்டத்தில், இறைச்சி கடை உரிமையாளர் சங்கத்தினர், தாங்களாகவே முன்வந்து, கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.சென்னையில், இன்று முதல் அனைத்து வகையான இறைச்சி கடைகளை மூட வேண்டுமென, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலும், இறைச்சிக்கடைகள் மற்றும் மீன்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.இதுகுறித்து கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் கேட்டதற்கு,''மக்கள் அதிகம் கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில், இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் கடைகளை மூடுவது குறித்து, அரசு தரப்பில் பேசி, உரிய ஆலோசனைகளை பெற்று, இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
'பார்சலில்' இறைச்சி
திருப்பூர் மாநகர் நல அலுவலர் பூபதி கூறியதாவது:இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடந்த வாரம் மக்கள் கூட்டம் அலைமோதியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக இறைச்சி கடைக்காரர்கள் வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, கால், அரை, முக்கால், ஒரு கிலோ என இறைச்சி பார்சல் செய்யப்பட்டு, விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள, 478 கடைக்காரர்களும் இதனை பின்பற்ற வேண்டும். வீதிகளுக்குள் இருக்கும் கடைகளை கண்காணிக்கும் வகையில், கடைக்கு இரு தன்னார்வலர் வீதம், மொத்தம், 400 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தயக்கம் எதற்கு?
ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இறைச்சி கடை சங்கத்தினர், தாங்களாகவே முன்வந்து கடைகளை மூட முடிவு செய்து அறிவித்துள்ளனர். ஆனால், திருப்பூரில் மட்டும் இறைச்சி கடைகளை திறந்து, மக்கள் கூடுவதை பார்த்தால், பலருக்கும் அச்சம் ஏற்படுகிறது.எவ்வளவுதான், போலீசார், தன்னார்வலர்கள் கட்டுப்படுத்தினால், மக்கள் கட்டுப்படுவதாக தெரியவில்லை என்பது, கடந்த ஞாயிறன்று வெளிப்பட்டது. இருப்பினும், வியாபாரிகள் முடிவு செய்து, இறைச்சி கடையை மூட வேண்டும்.

மூலக்கதை