சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி

தினகரன்  தினகரன்
சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: செல்போன் மூலமாக மக்கள் கண்காணிப்பு: கிரீன் சிக்னல் வந்தால் மட்டுமே ரோட்டில் நடக்க அனுமதி

பீஜிங்: கொரோனா பரவலை தடுக்க சீனாவின் தொழிற்சாலை, கடை வீதிகளில் செல்ல செல்போனில் ‘கிரீன் சிக்னல்’ இல்லையென்றால் அவர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ஓரளவு அடங்கிய நிலையில், வுகான் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அங்குள்ள தொழிற்சாலைகளும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தும், அங்கு மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சீன அரசு சந்தேகிக்கிறது. அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பர்களை கண்டுபிடிக்க, இங்கு செல்போன் வசதி பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்பவர்களை சோதனை செய்ய வசதியாக செல்போனில் புதிய அறிவியல் முறையை பின்பற்றுகின்றனர். அதன்படி, பணியாளர் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் பச்சை நிற சிக்னல் மூலம் வாழ்க்கை இயங்கத் தொடங்குகிறது. அதாவது, பச்சை அடையாளம் என்பது ஒரு ‘சுகாதார குறியீடு’ ஆகும். இது, சம்பந்தப்பட்ட நபர் நோய்த்தொற்று அறிகுறிகளிலிருந்து விடுபட்டுள்ளார் என்பதை கூறுகிறது. சுரங்கப்பாதை பணி, ஓட்டலுக்குள் செல்லுதல், வுகானுக்குள் கடைவீதிகளுக்குள் நுழைய இந்த அடையாளம் அவசியம். சீனாவில் கிட்டத்தட்ட அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால், இந்த சுகாதார குறியீடு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தரவுகளை முழுமையாக வைத்துள்ள சீன அரசு, மக்களை ெகாரோனாவில் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.உதாரணமாக, ஆடை உற்பத்தி நிறுவனத்தின் மேலாளரான வு ஷெங்காங், வுகான் சுரங்கப்பாதை நிலையத்தில் தனது ஸ்மார்ட்போனை வெளியே எடுத்து, அங்குள்ள ஒரு சுவரொட்டியின் பார் குறியீட்டை தனது தொலைபேசியில் ஸ்கேன் செய்தார். இது, அவரது அடையாள எண் மற்றும் பச்சை அடையாளத்தை காட்டியது. அதன்பின் சுரங்கப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவ்வாறு பச்சை அடையாளம் காட்டப்படவில்லை என்றால், அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார். ‘டிஜிட்டல் தொடர்புத் தடமறிதல்’ என்ற அறிவியல் முறைப்படி, ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் அவரது தொடர்புகள் கண்டறியப்படுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.1.1 கோடி மக்களிடமும் பரிசோதனை நடத்த முடிவு:சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகானில் இருந்துதான் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. இதனால் 3 மாத கடுமையான ஊடரங்கு அங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நோய் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் வேகமாக பரவுவதால், சீனாவில் கொரோனாவின் 2வது அலை வீசி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக வுகானில் சில கட்டுப்பாடுகள் நேற்று விதிக்கப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வுகானில் உள்ள 1.1 கோடி மக்களிடமும் பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கையில் நாடாளுமன்றம் முடங்கும் நிலை:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றத்தை கலைப்பதாக உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி 6 மாதத்திற்குள் புதிய அரசு பதவியேற்று நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். இதற்காக ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரசால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் வைரஸ் தீவிரமடைந்து நாடே முடக்கப்பட்டுள்ளதால், மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை என்றும், அதன் காரணமாக நாடாளுமன்றமே முடங்கும் நிலை ஏற்படும் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

மூலக்கதை