கொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும்? அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்

தினகரன்  தினகரன்
கொரோனாவின் தாக்குதல் எப்படி இருக்கும்? அடுத்த 3 மாதங்களுக்கு கணிப்பது மிக கடினம்

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு பற்றி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இது பற்றி அவர்கள் கூறியதாவது: நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் முடக்கத்தை 80-90 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனர். மேலும், சமூக இடைவெளியையும் பின்பற்றுகின்றனர். இது போன்ற சாதகமான சூழலில், முடக்கம் தொடங்கிய 20வது நாளில், கொரோனாவால் தாக்கப்படுவர்களின் எண்ணிக்கை 83 சதவீதம் குறையக் கூடும். முடக்க கால தொடக்கத்தில், இந்தியா கொரோனா பரவல் 2ம் கட்டத்தில் இருந்தது. அதாவது, நெருக்கமானவர்களிடம் மட்டுமே பரவியது. நாடு தற்போது நோய் பரவலின் 3ம் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த 21 நாள் முடக்க காலத்தில் வைரஸ் தொற்றிய ஒருவர், 2.2 என்ற அளவில் நோயை பரப்புவார். அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர், நோய்க்கான அறிகுறி தெரிய ஆரம்பித்து சிகிச்சைக்கு செல்லும் முன்பாக 2.2 சதவீதம் பேருக்கு அதை பரப்ப முடியும். இவரால் வைரஸ் தொற்றியவர்கள், அதற்கு அடுத்தக்கட்டமாக வைரஸ் தொற்றியவர்களால் ‘சூப்பர் ஸ்பிரட்டிங்’ என்ற அபாயகரமான சூழ்நிலை ஏற்படும். அப்போது, 20/80 என்ற விதிப்படி நோய் பரவும்.  இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 412 என்ற அளவில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள். அதில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார். இவருக்கு கொரோனா எளிதில் பரவும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் அடிப்படையில், அடுத்த 10 முதல் 20 நாட்களில் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவும், நோய் அறிகுறி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 30,790 ஆகவும் உயரும். நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 40வது நாளில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 360 ஆகவும், பலி 5,407 ஆகவும் உயரும். அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினம். எனவே, கூட்டம் கூடுவதை தவிர்த்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை