கொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி: இதுவரை 161 பேர் பாதிப்பு

திருமலை: ஆந்திராவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மட்டும் 144 பேர். இவர்களில் கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவில் உள்ள கும்ரிம்பலத்தை சேர்ந்த 52 வயதானவரின் மகனும் ஒருவர். டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கடந்த மாதம் 17ம் தேதி மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். கடந்த 30ம் தேதி காலை வாலிபரின் தந்தை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்நிலையில், அவருடைய ரத்தமும், மகனின் ரத்தமும் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில்  முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்ததும், இந்த வைரஸ் அவரது மகன் மூலம் அவருக்கு பரவியதும் நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவரது மகன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.லண்டனில் இருந்து வந்த வாலிபர் குணமடைந்தார்:ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், கடந்த மாதம் லண்டனில் இருந்து வந்தார். அப்போது தன்னுடன் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்த அவர், தானாக முன்வந்து சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே, அவரை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், 14 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு வாலிபர் குணமடைந்தார். அவருக்கு இருமுறை எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு டாக்டர்கள், மாவட்ட கலெக்டர், எஸ்பி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.நர்சுகளிடம் ஆபாச தொல்லை தே.பா. சட்டத்தில் நடவடிக்கை:டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 6 பேர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் தனிமை வார்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் பணியில் இருந்த நர்ஸ்களிடம் ஆபாசமாகவும், தகாத முறையிலும் நடந்து கொண்டனர். இதனால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உ.பி அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து லக்னோவில் பேட்டியளித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மனிதநேயத்தின் எதிரிகள். மருத்துவ பணியாளர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட செயல் மிக கடுமையான குற்றம். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களை விட மாட்டோம்,’’ என்றார்.வெளிமாநில தொழிலாளர்களை ஓட்டல்களில் தங்க வைக்கலாமா? மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்:முடக்கம் காரணமாக நாடு முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் பள்ளிகள் உட்பட இதர கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு சுகாதார வசதிகள் சரியில்லாததால், வெளி மாநில தொழிலாளர்களை ஓட்டல்கள், ஓய்வு விடுதிகளில் தங்க வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொளி காட்சி மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என தெரிவித்தார். இதன்பின் தீர்ப்பளித்த நீதிபகள், ‘‘மக்கள் ஆயிரக்கணக்கான ஆலோசனைகளை வழங்கலாம். அதையெல்லாம் கேட்கும்படி அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த முடியாது,’’ என கூறி மனுவை நிராகரித்தனர்.

மூலக்கதை