கொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
கொரோனா அவசரகால நிதியாக இந்தியாவுக்கு 7,600 கோடி: உலக வங்கி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்தியாவுக்கு அவசரகால நிதியாக ரூ.7,600 கோடியை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நிலையில், கொரோனா பாதிப்பை சமாளிக்க முதல்கட்டமாக 25 நாடுகளுக்கு அவசரகால நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு ரூ.7,600 கோடி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. நோய் தொற்று பாதித்தவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்காணித்தல், ஆய்வக பரிசோதனை, தனிநபர் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்தல், புதிதாக தனி வார்டுகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்த நிதி உதவி உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.  மேலும், கொரோனாவின் தீவிரத்தை குறைக்கவும், பொருளாதாரத்தை மீட்கவும் அடுத்த 15 மாதத்தில் ரூ.12 லட்சம் கோடி உதவித்தொகைகை அறிவிக்க உள்ளது. உலக வங்கி குழும தலைவர் டேவிட் மால்பாஸ் அளித்த பேட்டியில், ‘‘கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் வளரும் நாடுகளை வலுப்படுத்தவும், குறுகிய காலத்தில் பொருளாதார மற்றும் சமூக மீட்புக்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஏழ்மையான, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என்பதால் அத்தகைய நாடுகளை அடையாளம் கண்டு தேவையான உதவிகளை உலக வங்கி வழங்கி வருகிறது’’ என்றார். இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானுக்கு ரூ.1500 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.750 கோடியும், இலங்கைக்கு ரூ.900 கோடியும் உலக வங்கி நிதி ஒதுக்கி உள்ளது.

மூலக்கதை