மார்ச் மாதமும் வாகன விற்பனை கடும் சரிவு: ஆட்டோமொபைல் துறைக்கு தொடரும் சோகம்

தினகரன்  தினகரன்
மார்ச் மாதமும் வாகன விற்பனை கடும் சரிவு: ஆட்டோமொபைல் துறைக்கு தொடரும் சோகம்

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் வாகன விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. பணமதிப்பு நீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் வாகன விற்பனை துறை கடும் பாதிப்பை அடைந்து வருகிறது. இதனால் கடந்த ஓராண்டாகவே வாகன உற்பத்தி துறையினருக்கு சோதனைக்காலம் ஆகிவிட்டது. பிஎஸ்6 வாகனங்களை அறிமுகம் செய்வதால், ஷோரூம்களில் தேங்கியுள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கடந்த மார்ச் மாத வாகன விற்பனை தொடர்பாக நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மாருதி நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 83,792 வாகனங்களை விற்றுள்ளது. இது முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தை விட 47 சதவீதம் சரிவு. இந்த நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் சரிந்துள்ளது.  இதுபோல், ஹூண்டாய் கார் விற்பனை 47.21 சதவீதம் சரிந்து 32,279 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை 83.98 சதவீதம் சரிந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 11,012 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது.  மகிந்திரா அண்ட் மகிந்திராவின் பயணிகள் வாகனம் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 88.24 சதவீதம் குறைந்துள்ளது. அசோக் லேலண்ட் வாகனங்களின் விற்பனை 91.29 சதவீதம், வால்வோ எய்ச்சர் வாகன விற்பனை 82.72 சதவீதம் குறைந்துள்ளது என நிறுவனங்கள் தரப்பில் வெளியிடப்பட்ட வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம், டூவீலர் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தின் 2,42,57 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஒட்டுமொத்த அளவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும், உள்நாட்டு விற்பனை 55 சரிந்து விட்டதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் வாகன விற்பனை 55 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தின் 3,25,323 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த மாதத்தில் 1,44,739 ஆக குறைந்து விட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டோமொபைல்  துறைக்கு சோதனைக்காலம் மேலும் சில மாதங்கள் நீடிக்கலாம் என ஆட்டோமொபைல்  துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை