முக கவசம், கையுறை தயாரிப்பில் மும்முரம்! தினமும், ஒரு லட்சம் அனுப்பப்படுகிறது

தினமலர்  தினமலர்
முக கவசம், கையுறை தயாரிப்பில் மும்முரம்! தினமும், ஒரு லட்சம் அனுப்பப்படுகிறது

திருப்பூர்:கொரோனா தடுப்புக்கு தேவையான முக கவசம், கையுறை தயாரிப்பில், திருப்பூர் நிறுவனங்கள் வேகம் காட்டிவருகின்றன.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டுவருகிறது.
வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டினாலும், எதிர்கொள்ள ஏதுவாக, மாவட்டம் தோறும் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ளோர் அணிவதற்காக முகக் கவசம், கையுறை தயாரிப்பு பணிகள், முடுக்கிவிடப்பட்டுள்ளது.ஆடை தயாரிப்பு கட்டமைப்புகள் உள்ளதால், மற்ற நகரங்களைவிட திருப்பூரில் எளிதாக முக கவசங்கள் தயாரிக்கமுடியும். அதனால், தமிழக அரசு சார்பில், முக கவசம் தயாரிப்புக்கான ஆர்டர்கள், அதிகளவில் திருப்பூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், அனுப்பர்பாளையம், பல்லடம், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள, ஏற்றுமதி உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அரசிடம் ஆர்டர் பெற்று, முக கவசம் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.மும்பை, பெங்களூருவிலிருந்து, வைரஸ் உட்பட நுண்ணுயிர்களை வடிகட்டும் மூன்றடுக்கு துணியை தருவித்து, முக கவசம் தயாரிக்கப்படுகிறது.விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலளர்களைக்கொண்டு, தயாரிப்பு பணிகள் நடக்கிறது.
உற்பத்தி செய்யப்படும் முக கவசங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம், பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், பத்து நிறுவனங்கள் முக கவசம், கையுறை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் இயங்கவும், மூலப்பொருட்கள் கொண்டு வருவது; உற்பத்தி செய்யும் முகக் கவசங்களை அனுப்புவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, முக கவசம், கையுறை ஆகியன, தினம் ஒரு லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகிறது. ஈரோடு, கோவை, சென்னை என, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தேவை விவரங்கள் பெறப்பட்டுள்ளன.அதனடிப்படையில், அந்தந்த மாவட்டங்களுக்கு, உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலம் நேரடியாக அனுப்பிவைக்கப்படுகிறது.தேவை அதிகரித்தாலும், தட்டுப்பாடு ஏற்படாதவகையில், முக கவசம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை