கொரோனா தடுப்பு நிதிக்காக உலக கோப்பை சீருடை ஏலம்: ஜோஸ் பட்லர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நிதிக்காக உலக கோப்பை சீருடை ஏலம்: ஜோஸ் பட்லர் அறிவிப்பு

லண்டன்: கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக நிதி திரட்டும் வகையில், உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது தான் அணிந்திருந்த  சீருடையை ஏலம் விடப்போவதாக இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு எதிரான பணிகளுக்காக பிரபலங்கள் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்  உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்த சீருடையை ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளார். ‘பைனலில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் அந்த சீருடையில் ஆட்டோகிராப் போடுவார்கள். மேலும் சீருடையை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகை ராயல் பிராம்ப்டன், ஹர்பீல்டு மருத்துவமனைகள் அறகட்டளைக்கு  வழங்கப்படும். அந்த நிதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் பாதுகாப்பு கருவிகள் வாங்க பயன்படுத்தப்படும்’ என்று பட்லர் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பிறகு நேற்று வரை சீருடையை  150 பேர் ஏலம் எடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் அதிகபட்சமாக 65ஆயிரம் பவுண்ட்ஸ் வரை ஏலம் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் பைனலில் நியூசிலாந்துடன் மோதிய இங்கிலாந்து முதல்முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான சூப்பர் ஓவரில் விக்கெட் கீப்பர் பட்லர் சிறப்பாக செயல்பட்டதும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மூலக்கதை