சீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே?

தினகரன்  தினகரன்
சீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே?

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி அரசுக்கு முதன் முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயமாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்திலேயே விலங்குகள் இறைச்சி சந்தையில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. அவர் இதை சாதாரண காய்ச்சல், சளி என்றுதான் நினைத்துவிட்டார். ஆனால், அதேபோல், அடுத்தடுத்து பலர் இதே அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு படையெடுத்தபோதுதான் ஏதோ ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவது டாக்டர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில், வுகான் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும்  ஐபென் என்ற பெண் டாக்டருக்கு சார்ஸ் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்பட்ட ஒரு நோயாளியின் ஆய்வு அறிக்கை கிடைத்தது. இதை பார்த்த பின்னர்தான் வுகான் நகரில் மக்களுக்கு பரவி வருவது கொரோனா வைரஸ் காய்ச்சல் என்று தெரியவந்தது. இதுகுறித்த, தனது சக டாக்டரான லி வென் லியாங் என்பவரிடம் அவர் கூறியுள்ளார்.  அத்துடன் தனது சக டாக்டர்களுக்கு ஐபென் இதுகுறித்த தகவலை அனுப்பி இருந்தார். டாக்டர்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், கொரோனா பற்றிய வீரியத்தை அறியாமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 3 டாக்டர்கள் இறந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சிகிச்சை அளித்தபோதும், டாக்டர் லியாங்கும் கொரோனாவுக்கு பலியானார். இந்நிலையில், டாக்டர் ஐபென் ெகாரோனா பாதிப்பை பற்றி தான் அன்றே எச்சரித்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பாதிப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும் என்றும், இப்போது உலகளவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் பேட்டி அளித்தார். இந்த பேட்டியை தொடர்ந்து அவர் மாயமாகிவிட்டார். அவர் எங்கே சென்றார், அரசு படையினரால் கைது செய்யப்பட்டாரா என்ற தகவலும் தெரியாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை