ஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை

தினகரன்  தினகரன்
ஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை

வாஷிங்டன்: இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவின் உச்சக்கட்ட தாக்குதல் தொடங்கி இருக்கிறது. முதல் முறையாக அங்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.  அமெரிக்காவில் கொரோனா வைரசால் அதிகபட்சம் 2 லட்சம் பேர் வரை பலியாவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்த நிலையில், அது தற்போது உச்சக்கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளது. பலி எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 914 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4,081 ஆக உள்ளது. கடந்த 3 நாளில் பலி எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. இதில் 40 சதவீத பலி நியூயார்க் நகரில் ஏற்பட்டுள்ளது.நியூயார்க்கில் மட்டும் 1,700 பேர் பலியாகி இருக்கிறார்கள். மொத்த 1 லட்சத்து 90 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நியூயார்க் நகரில் மட்டும் 75,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்தியாவசிய மருத்துவ உபகரணமான வென்டிலேட்டர் போதிய அளவுக்கு இல்லாமல் நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர்.அடுத்த 2 வாரங்கள் இன்னும் மிக மிக வலி மிகுந்ததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்கா முழுவதும் 80 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  ஏற்கனவே உச்சக்க்கட்ட பலியை சந்தித்து வரும் இத்தாலி, ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அங்கு 26 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸ் (3,523 பேர் பலி), இங்கிலாந்து (1,789), நெதர்லாந்து (1,039), பெல்ஜியம் (705) நாடுகளில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. வைரசின் பூர்வீகமான சீனாவில் 3,305 பேர் பலியாகி உள்ளனர். 96 சதவீத மக்கள் குணமடைந்துள்ளனர்.‘22 லட்சம் மக்கள் இறந்திருப்பார்கள்’அமெரிக்க பொது சுகாதாரத் துறையின் கொரோனா சிறப்புக் குழுவைச் சேர்ந்த டாக்டர் டெபோரா பிர்க்ஸ் கூறுகையில், ‘`கொரோனா பரவலை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏப்ரல் 30 வரை சமூக விலகலை அமல்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள முடக்கம் காரணமாக, இந்த வைரசால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை மட்டுமே இருக்கக் கூடும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டிருந்தால், 15 லட்சம் முதல் 22 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பார்கள்,’’ என்றார்.‘ஆஹா... அருமை, அருமை’ மோடிக்கு இவாங்கா நன்றிநாடு முழுவதும் முழு ஊரடங்கு நேரத்தில் மன அழுத்தத்தைப் போக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் யோகா செய்யலாம் என்று கூறி பிரதமர் மோடி அனிமேஷன் வீடியோக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தா. ‘எனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் யோகா செய்வேன். யோகாவால் பல பலன்களைப் பெற்றுள்ளேன்,’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி வெளியிட்டிருந்த டிவிட்டை அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் ரீடிவிட் செய்துள்ளார். அதில், ‘இது மிகவும் அருமையானது, தங்களுக்கு நன்றி,’ என்று கூறியுள்ளார்.2ம் உலகப் போருக்கு பின் சந்திக்கும் பெரிய சவால் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டரஸ் அளித்த பேட்டியில், ‘‘ஐநா சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற ஒரு உலக சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டதில்லை. சுகாதார நெருக்கடியை விட மிகவும் தீவிரமானது. இது மனித இனத்திற்கான நெருக்கடி. ஒருபுறம் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மறுபுறம் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 பாதிப்புகளும் ஒன்று சேர வருவதால், 2ம் உலகப் போருக்குப் பிறகு சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது’’ என்றார்.

மூலக்கதை