ஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு

தினகரன்  தினகரன்
ஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு

டெஹ்ரான்: ஈரானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்கு 3,036 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 47,593 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதும், அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மத்திய மற்றும் தென் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பிராந்தியங்களிலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரக்கால சேவைகள் துறையின் தலைவர் கலெதி தெரிவித்துள்ளார். மேலும், 22 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறினார். மேலும், சில நாட்களுக்கு மழை நீடிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை